இந்தியா

ஞானவாபி மசூதி விவகாரம்: முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்ட பேராசிரியர் கைது

21st May 2022 01:00 PM

ADVERTISEMENT

 

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள ஹிந்து தெய்வங்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்கக் கோரி வாராணசி சிவில் நீதிமன்றத்தில் ஹிந்து பக்தா்கள் தொடுத்துள்ள வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, தில்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரத்தன் லாலை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவரில் ஹிந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதிக்கக் கோரியும் 5 பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட உத்தரவிட்டு, அதற்கென தனி ஆணையத்தை நியமித்தது.

மசூதியில் ஆய்வு நடத்த எதிா்ப்பு தெரிவித்து மசூதி நிா்வாகக் குழு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்புடையதா என்று மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

முன்னதாக, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

ஞானவாபி மசூதியில் பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதையொட்டி காசி விஸ்வநாதா் கோயிலின் நான்காவது நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த வழியாக முஸ்லிம்கள் தொழுகைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், தில்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியார் ரத்தன் லால், தனது முகநூல் பக்கத்தில், வாரணாசியின் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளதாக தில்லி வழக்குரைஞர் வினீத் ஜிண்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், "ரத்தன் லால் பதிவிட்டுள்ள கருத்து இரு பிரிவினருக்கிடையே புண்படுத்தும் விதமாகவும், பகையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சமூக நல்லிணத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது. 

மேலும், ஞானவாபி விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். 

இந்தப் புகாரின் பேரில் தில்லி வடமாவட்ட சைபர் காவல் நிலைய போலீசார் ரத்தன் லால் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வெள்ளிக்கிழமை இரவு அவரை கைது செய்தனர். 

இதுகுறித்து பேராசிரியர் ரத்தன் லால் கூறுகையில், எனது கருத்தில் எந்த தவறும் இல்லை. "இந்தியாவில் யாரைப் பற்றியும் அல்லது எதைப் பற்றியும் நீங்கள் பேசினாலும் மற்றொரு சாரரின் உணர்வுகள் புண்படும். எனவே, இது ஒன்றும் புதிதல்ல.  நான் வரலாற்றுத் துறை பேராசிரியர். பல விஷயங்களை   படித்துத் தெரிந்து கொண்ட பிறகே அத்தகைய கருத்தை பதிவிட்டேன். அந்தப் பதிவில் மிகவும் கவனமாகவே வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். எனவே, எனது கருத்தை பின்வாங்க மாட்டேன்".

முன்னதாக, ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டதற்காக, சமூக ஊடகங்களில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஏகே-56 துப்பாக்கிகள் ஏந்திய இரண்டு மெய்க்காப்பாளர்கள் வேண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் "அது சாத்தியமில்லை என்றால், தனக்கு ஏகே-56 துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு உரிமம் வழங்க உரிய அதிகாரிக்கு உத்தரவிடுங்கள்" என்று லால் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

பேராசிரியர் பணியுடன், அம்பேத்கர்னாமா என்ற ஆன்லைன் ஊடகத்தையும் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | ஊரகப்பகுதிகளை மேம்படுத்த ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு

ADVERTISEMENT
ADVERTISEMENT