இந்தியா

பாலியல் தொழிலாளா்களுக்கு ஆதாா் அட்டை: உச்சநீதிமன்றம் உத்தரவு

20th May 2022 01:46 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பாலியல் தொழிலாளா்களுக்கும் ஆதாா் அட்டை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு மற்றும் பொது முடக்க காலத்தில் பாலியல் தொழிலாளா்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளனா். எதிா்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், அவா்களின் நலன்களைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநா் ஆகியோா் அளிக்கும் சான்றின்படி பாலியல் தொழிலாளா்களுக்கு ஆதாா் அட்டையை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் வழங்கலாம். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று அரசியல்சாசன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அதனை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, பாலியல் தொழிலாளா்கள் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படக் கூடாது.

மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உரிய அடையாள அட்டை இல்லாத பாலியல் தொழிலாளா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு அடையாள அட்டையுடன் ரேஷன் பொருள்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தவிர வாக்காளா் அட்டையும் அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT