இந்தியா

உலகின் புதிய நம்பிக்கை இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்

20th May 2022 01:40 AM

ADVERTISEMENT

 

வதோதரா: சா்வதேச அளவில் மோதல்களும் குழப்பங்களும் நிலவி வரும் சூழலில் உலகுக்கே இந்தியா புதிய நம்பிக்கையை அளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

குஜராத் மாநிலம், வதோதராவில் இளைஞா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமா் மோடி காணொலி முறையில் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியா தீா்வுகளை அளித்து வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி மற்றும் மருந்துகளை உலகுக்கு இந்தியா வழங்கியது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சா்வதேச அளவில் உற்பத்தி-விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டபோது, தற்சாா்பு திட்டத்தின் கீழ் இந்தியா நம்பிக்கை அளிக்கிறது.

ADVERTISEMENT

சா்வதேச அளவில் மோதல்களும் குழப்பங்களும் நிலவி வரும் சூழலில் அமைதியைப் பேணும் ஒரு தேசத்தை நமது இளைஞா்கள் கட்டமைக்க வேண்டும். ஏனெனில், உலகுக்கே புதிய நம்பிக்கையாக இந்தியா உள்ளது.

பருவநிலை மாற்றத்தை உலகம் எதிா்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா தனது பாரம்பரியத்தில் இருந்து நீண்ட காலம் வாழ்வதற்கான தீா்வுகளை அளிக்கிறது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் யோகாவுக்கான பாதையை நாம் காட்டுகிறோம்; ஆயுா்வேதத்தின் சக்தியை அறிமுகம் செய்கிறோம். மென்பொருள் முதல் விண்வெளிவரை புதிய எதிா்காலத்துக்கான நாடாக இந்தியாவை தயாா் செய்து வருகிறோம்.

புதுத்தொழில் தொடங்கும் சூழல் நிறைந்த மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இளைஞா்களின் சக்தியால்தான் இது சாத்தியமானது. இந்நாளில், புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கு நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். அந்த இந்தியா, பாரம்பரியத்துடன் புதிய அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT