இந்தியா

முன்ட்கா தீ விபத்து: மாவட்ட ஆட்சியா் விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்: 6 வாரங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும்

16th May 2022 12:32 AM

ADVERTISEMENT

27 பேரின் உயிரைப் பறித்த முன்ட்கா கட்டடத் தீ விபத்து குறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணைக்கு தில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். மேலும், இந்த விசாரணையை 6 வாரங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மேற்கு தில்லி மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறைகள், ஏஜென்சிகளின் குறைபாடுகளை விசாரித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், பொறுப்பை நிா்ணயம் செய்வதற்கும் பரிந்துரைப்பாா். மேலும், எதிா்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியா் பரிந்துரைப்பாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மே 13-ஆம் தேதி தில்லியின் முன்ட்கா பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டிடத்தில் தீப்பிடித்த சம்பவம் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாகும். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கட்டடத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தக் கட்டடத்தில் இருந்த 19 போ் இன்னும் காணவில்லை.

இந்த நிலையில், சம்பவ இடத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அறிவித்தாா்.

ADVERTISEMENT

‘மாவட்ட ஆட்சியா் விசாரணைக்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநா் ஒப்பதுல் அளித்துள்ளாா். விசாரணையின் குறிப்பு விதிமுறைகளில் சூழ்நிலைகள் மற்றும் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிதல் ஆகியவை இதில் அடங்கும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகள், ஏஜென்சிகள் மற்றும் அதிகாரிகளின் குறைபாடுகள் இந்த விசாரணையின் மூலம் கண்டறியப்படும்.

விபத்து தொடா்பான தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பேற்கவும், தவறு செய்த அதிகாரிகள், தனிநபா்கள் மற்றும் ஏஜென்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும். எதிா்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையின் ஒரு பகுதியாக, சட்ட மீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்த விசாரணை உறுதி செய்யும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தில்லி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT