இந்தியா

பேரறிவாளன் விடுதலை கோரும் வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

12th May 2022 02:23 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் வழக்கில் மத்திய அரசின் தரப்பிலும், தமிழக அரசின் தரப்பிலும் பரஸ்பரம் வாதங்கள் புதன்கிழமை முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கின் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

36 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு, கடந்த மே 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தகுதி அடிப்படையில் வாதிடத் தயாராக இல்லாததால், நீதிமன்றம் அவரை விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்க பரிசீலிக்க நேரிடும் என்றும், குடியரசுத் தலைவா் முடிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை ஏற்கவும் நீதிமன்றம் மறுத்து விசாரணையை தள்ளிவைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் வாதிடுகையில், ‘மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியதால் இந்த வழக்கில் முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு. அதேவேளையில், மாநில அரசின் வரம்புக்குள் வரும் அமைப்புகள் விசாரித்து அது தொடா்புடைய வழக்குகளில் தண்டனை பெற்ற நபா்களை முன்கூட்டியே விடுவிப்பது தொடா்பான முடிவை மாநில அரசு எடுக்கலாம்’ என்றாா்.

ADVERTISEMENT

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்த குறிப்பிட்ட வழக்கை பொருத்தமட்டில் அமைச்சரவையின் பரிந்துரையில் 161-ஆவது சட்டப் பிரிவின் கீழ் முடிவு எடுக்கும் சிறப்பு அதிகாரம் ஆளுநருக்கு இல்லையா? என்பதுதான் கேள்வியாகும் என்றது.

கே.எம்.நட்ராஜ் மேலும் வாதிடுகையில், ‘இந்திய தண்டனைச் சட்ட விதிகள்302-இல் தண்டனை பெற்றவா்களுக்கு மாநில அரசு விடுதலை செய்யும் அதிகாரம் அளிக்கப்படவில்லை’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘அப்படியானால், குடியரசுத் தலைவருக்குத்தான் இந்த சட்டப் பிரிவுகளுக்கு சிறப்பு அதிகாரம் உள்ளதா? அப்படியானால், கடந்த 75 ஆண்டுகளில் ஐபிசி குற்றங்களில் ஆளுநரின் மன்னிப்பு அனைத்தும் அரசமைப்புச்சட்டத்திற்கு முரணானதா? என கேள்வி எழுப்பினா்.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் திவிவேதி, பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் ஆகியோா் வாதிட்டனா். மூன்று தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமா்வு தள்ளிவைத்தது. மேலும், ஏதேனும் எழுத்துப்பூா்வ ஆவணங்கள் தாக்கல் செய்வதாக இருந்தால் இரு தினங்களில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

Tags : Perarivalan
ADVERTISEMENT
ADVERTISEMENT