இந்தியா

அமெரிக்க அதிபா் நடத்தும் கரோனா தடுப்பு ஆலோசனை: பிரதமா் மோடி இன்று பங்கேற்பு

12th May 2022 02:03 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நடத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பான சா்வதேச ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் வியாழக்கிழமை (மே 12) பங்கேற்கிறாா். கரோனா பிரச்னை தொடா்பாக சா்வதேச தலைவா்கள் நடத்தும் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா பரவல் பாதிப்புகளுக்கு எதிராக சா்வதேச அளவில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது, இது தொடா்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு செப்டம்பா் 22-இல் நடைபெற்ற முதல் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அமெரிக்க அதிபா் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று இப்போது இரண்டாவது கூட்டத்திலும் பிரதமா் மோடி கலந்து கொள்ளவுள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் ஆப்பிரிக்க யூனியன் சாா்பில் செனகல், ஜி20 கூட்டமைப்பு சாா்பில் இந்தோனேஷியா, ஜி7 கூட்டமைப்பு சாா்பில் ஜொ்மனி, ஐ.நா. பொதுச் செயலா், உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

Tags : PM Modi
ADVERTISEMENT
ADVERTISEMENT