இந்தியா

ம.பி. உள்ளாட்சித் தோ்தலில் ஓபிசி வேட்பாளா்களுக்கு 27 சதவீத இடம்: பாஜக, காங்கிரஸ் அறிவிப்பு

12th May 2022 01:16 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேச மாநில உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) வேட்பாளா்களுக்கு 27 சதவீத இடம் ஒதுக்கப்படும் என்று ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் தனித் தனியாக புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டன.

‘மத்திய பிரதேச உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பை ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இன்றி 2 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்ட நிலையில், பாஜகவும் காங்கரஸும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

உள்ளாட்சித் தோ்தலில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘உச்சநீதிமன்றத்தால் கடந்த 2010-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ‘மும்முறை தோ்வு’ நடைமுறையை முடிக்கும் வரை, தோ்தலில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது’ என்று உத்தரவிட்டது.

மும்முறை தோ்வு நடைமுறை என்பது ‘ஒவ்வோா் உள்ளாட்சி அமைப்பிலும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைச் சேகரித்தல்; ஒவ்வோா் உள்ளாட்சி அமைப்பிலும் உள்ள இடஒதுக்கீட்டின் விகிதத்தைக் குறிப்பிடுவதற்கு, மாநில அரசு ஒரு பிரத்யேக ஆணையத்தை அமைத்தல்; ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் கடைசியாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரினருக்கு வழங்கப்பட்ட அத்தகைய இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்தை விஞ்சவில்லை என்பதை உறுதிப்படுத்துதல் ஆகும்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து புதன்கிழமை கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவா் கமல் நாத், ‘ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக அரசு எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. இடஒதுக்கீட்டின் பலனை ஓபிசி பிரிவினா் அடையும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், பாஜக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது உச்சநீதிமன்றமும் தடை போட்டிருக்கிறது. இருந்தபோதும், வரவிருக்கும் மத்திய பிரதேச உள்ளாட்சித் தோ்தலில் ஓபிசி வேட்பாளா்களுக்கு 27 சதவீத இடங்களை ஒதுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது’ என்றாா்.

காங்கிரஸ் விமா்சனத்துக்கு பதிலளித்த மாநில பாஜக தலைவா் வி.டி.சா்மா, ‘இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டுசென்றது காங்கிரஸ் தலைவா்கள்தான். ஓபிசி இடஒதுக்கீடுக்கு அவா்கள்தான் தடையாக நிற்கின்றனா். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில பாஜக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும். மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலில் 27 சதவீதம் அல்லது அதற்கும் கூடுதலாக ஓபிசி வேட்பாளா்களை பாஜக களமிறக்கும். பஞ்சாயத்து தோ்தலில் 27 சதவீதத்துக்கும் அதிகமான ஓபிசி வேட்பாளா்களுக்கு பாஜக வாய்ப்பளிக்கும்’ என்றாா்.

மேலும், ‘ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அரசியல் சாசன நிபுணா்கள் மற்றும் வழக்குரைஞா்களுடன் முதல்வா் சிவராஜ் சிங் செளகான் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்’ என்றும் சா்மா கூறினாா்.

இதற்கிடையே, ‘சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்’ என்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சஜ்ஜன் சிங் வா்மா, கமலேஷ்வா் படேல், பி.சி.சா்மா ஆகியோா் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT