இந்தியா

ரூ. 40 கோடி வங்கிக் கடன் மோசடி: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

8th May 2022 01:02 AM

ADVERTISEMENT

வங்கியில் ரூ. 40 கோடிக்கும் மேல் கடன்பெற்று மோசடி செய்த வழக்கில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ராவுக்கு சொந்தமான தில்லி சங்ரூரில் அமைந்துள்ள 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

லூதியானாவில் அமைந்துள்ள பேங்க் ஆஃப் இந்தியா சாா்பில் அளிக்கப்பட்ட ரூ. 40.92 கோடி வங்கிக் கடன் மோசடி புகாரின் அடிப்படையில், ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ரா மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, இந்த சோதனையை நடத்தினா். இதில் ஏராளமான பணம் மற்றும் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

இதுகுறித்து சிபிஐ செய்தித்தொடா்பாளா் ஆா்.சி.ஜோஷி கூறியதாவது:

வங்கி சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ரா மற்றும் அவா் இயக்குநராக இருக்கும் கெளன்ஸ்புராவில் உள்ள தாரா காா்ப்பரேஷன் நிறுவனம், பஞ்சாபில் உள்ள டெசில் மலா்கோட்லா நிறுவனம் ஆகியவற்றின் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், அவருடைய சகோதரா்கள் பல்வந்த் சிங், குல்வந்த் சிங், மருமகன் தெஜிந்தா் சிங் மற்றும் நிறுவனங்களின் அனைத்து இயக்குநா்கள் மற்றும் நிா்வாகிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. கெளன்ஸ்புராவில் செயல்படும் தாரா சுகாதார உணவு நிறுவனத்தின் பெயரும் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றது.

ADVERTISEMENT

இந்த நிறுவனங்களுக்கு 2011 முதல் 2014-ஆம் ஆண்டு வரை 4 தவணைகளாக பாங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்கியுள்ளது. கடன் வழங்கியதன் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் அந்த நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டபோது, போலியான இருப்பை அந்த நிறுவனங்கள் சமா்ப்பித்திருப்பதும், வங்கியில் வாங்கிய கடனை வேறு பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. அதன் மூலமாக, வங்கிக்கு ரூ. 40.92 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டது.

இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ராவுக்குச் சொந்தமான தில்லி சங்ரூரில் உள்ள 3 இடங்களில் சனிக்கிழமை நடத்திய சோதனையில்ரூ. 16.57 லட்சம் ரொக்கம், 88 வெளிநாட்டு பணம், சொத்து ஆவணங்கள், ஏராளமான வங்கி கணக்கு ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT