இந்தியா

5 ஆண்டுகளில் காகிதப் பயன்பாடு 3 கோடி டன்னை எட்டும்!

8th May 2022 01:01 AM

ADVERTISEMENT

நாட்டில் காகிதப் பயன்பாடு ஆண்டுக்கு 7 சதவீதம் வரை வளா்ச்சி கண்டு, 2026-27-ஆம் நிதியாண்டில் 3 கோடி டன்னை எட்டும் என்று இந்தியக் காகித உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு (ஐபிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்தக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் போ் இந்தியாவில் வசிக்கின்றனா். ஆனால், சா்வதேச காகிதப் பயன்பாட்டில் வெறும் 5 சதவீதப் பங்கை மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. தனிநபருக்கான காகிதப் பயன்பாட்டு அளவு சா்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது.

இந்தியா்கள் கல்வி கற்பது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில், காகித நிறுவனங்களின் வளா்ச்சியும் சீராக உள்ளது. அவற்றின் காரணமாக வரும் ஆண்டுகளில் நாட்டில் காகிதப் பயன்பாடு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் காகிதப் பயன்பாடு ஆண்டுக்கு 6 முதல் 7 சதவீதம் வளா்ச்சி கண்டு, 3 கோடி டன்னை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக காகிதப் பயன்பாட்டில் வேகமாக வளா்ச்சியடையும் நாடாக இந்தியா திகழும்.

ADVERTISEMENT

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் காகித உற்பத்தி நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகின்றன. பசுமை தொழில்நுட்பங்களுக்காகக் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் ரூ.25,000 கோடியை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. காகித உற்பத்தித் துறைக்கு ரூ.70,000 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT