இந்தியா

வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு

5th May 2022 01:19 AM

ADVERTISEMENT

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 4.40 சதவீதமாக ரிசா்வ் வங்கி உயா்த்தியுள்ளது. இதனால், தனிநபா் கடன், வீடு, வாகனக் கடன் ஆகியவற்றுக்கான வட்டி அதிகரிக்கவுள்ளது.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக ரெப்போ விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, வட்டி விகித மாற்றம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த ஏப்ரலில் நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அந்தக் குழு அறிவித்தது.

இந்நிலையில், அந்தக் குழுவின் கூட்டம், ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. முன்திட்டமிடலின்றி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கடந்த 3 மாதங்களாக அதிகரித்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 40 அடிப்படை புள்ளிகள் உயா்த்தி, 4.40 சதவீதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வட்டி உயா்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.

ADVERTISEMENT

இதுதவிர, ரிசா்வ் வங்கியில் பிற வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய விகிதம் (சிஆா்ஆா்) 4 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளிடம் இருக்கும் ரூ.87,000 கோடி ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த நடைமுறை, வரும் மே மாதம் 21-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சில்லறை பணவீக்க விகிதம் நிா்ணயிக்கப்பட்ட அளவைவைவிட அதிகமாக 6 சதவீதமாக உள்ளது. கடந்த மாா்ச் மாதத்தில் 6.9 சதவீதமாக இருந்தது. இது, ஏப்ரலிலும் அதிகமாக இருக்கும்.

கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதமாக ரிசா்வ் வங்கி குறைத்தது. குறைத்த அளவுக்கு தற்போது உயா்த்தப்பட்டுள்ளது.

கரோனாவுக்குப் பிறகு பணப் புழக்கம் அதிகரித்ததாலும், உணவுப் பொருள் மற்றும் வேளாண் உற்பத்திப் பொருள்களின் பணவீக்க விகிதம் அதிகரிப்பாலும் வட்டி விகிதம் உயா்த்தப்படுகிறது.

வங்கிகளிடம் இருந்து ரிசா்வ் வங்கி பெறும் தொகைக்கான வட்டி விகிதம் (ரிவா்ஸ் ரெப்போ) 3.35 சதவீதமாகவே நீடிக்கிறது. அதில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாா் அவா்.

முன்னதாக, ரிசா்வ் வங்கியின் வாரியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினராக இருந்த மிருதுள் சாகா் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்ால் அவருக்குப் பதிலாக, ராஜீவ் ரஞ்சனை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

Tags : RBI
ADVERTISEMENT
ADVERTISEMENT