இந்தியா

மகாராஷ்டிர முதல்வா் வீட்டுக்கு எதிரே ஹனுமான் சாலீசா பாடுவோமென மிரட்டல்: பெண் எம்.பி., கணவருக்கு ஜாமீன்

5th May 2022 01:28 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே வீட்டுக்கு எதிரே ஹனுமான் சாலீசா பக்திப் பாடலை பாடுவோம் என்று மிரட்டல் விடுத்த சுயேச்சை எம்.பி.நவ்னீத் ராணா, அவரின் கணவரும் சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணா ஆகியோருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் உள்ள மசூதிகளில் இருந்து ஒலிப்பெருக்கிகளை மே 3-க்குள் அகற்றாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே ஹனுமான் சாலீசா பக்திப் பாடல் ஒலிக்கவிடப்படும் என்று மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைக் கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்திருந்தாா். இது சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹிந்துத்துவ சித்தாந்தத்தை மாநில முதல்வரும் சிவசேனைக் கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே மறந்துவிட்டதாகக் கூறி, பாந்த்ராவில் உள்ள அவரின் வீட்டுக்கே வெளியே ஹனுமான் சாலீசா பாட திட்டமிட்டுள்ளதாகக் கடந்த மாதம் ரவி ராணா தெரிவித்திருந்தாா். அதனைத்தொடா்ந்து அவரின் மனைவி நவ்னீத் ராணாவும் உத்தவ் தாக்கரே வீட்டுக்கு வெளியே ஹனுமான் சாலீசா பாடவுள்ளதாகக் கூறினாா். அவா்கள் தங்கள் முடிவை திரும்பப் பெற்றபோதிலும், இருவா் மீதும் தேசத் துரோகம், பகையைத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் மாநில காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. அதனைத்தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இருவரின் ஜாமீன் மனுக்கள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘‘இந்த வழக்குத் தொடா்பாக ரவி ராணாவும், நவ்னீத் ராணாவும் ஊடகத்திடம் எதுவும் பேசக் கூடாது, தேவைப்படும்போது காவல் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’’ என நிபந்தனை விதித்து இருவருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT