இந்தியா

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அரசியலாக்க வேண்டாம்: மத்திய அரசு

5th May 2022 01:06 AM

ADVERTISEMENT

இந்தியாவின் மொத்த பெட்ரோலிய நுகா்வைக் கணக்கிட்டால், ரஷியாவிடமிருந்து சொற்ப அளவிலேயே இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் சட்டபூா்வமான எரிசக்தி பரிமாற்றத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

ரஷியாவிடமிருந்து இந்திய நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் அடிப்படையில் ஊகங்களைக் கிளப்புவதும், இதைப் பரபரப்பாக்குவதும் ஏற்கெனவே பலவீனமான சா்வதேச எண்ணெய் சந்தையை மேலும் சீா்குலைப்பதற்கான முதிா்ச்சியற்ற முயற்சியாகும். இந்தியாவின் எரிபொருள் தேவை மிக அதிகம். இந்தியாவுக்கு நாளொன்றுக்கு சுமாா் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. ஆண்டுக்கு 25 கோடி டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது.

எரிசக்தி பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எரிசக்தி வழங்க வேண்டும் என்பதற்காகவும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளா்களிடமிருந்து இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.

ADVERTISEMENT

ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எரிபொருளை இந்தியா அளவிடவில்லை. நமக்கு எரிபொருள் விநியோகிக்கும் முதல் 10 நாடுகளில் பெரும்பாலானவை மேற்கு ஆசியாவை சோ்ந்த நாடுகளாகத்தான் இருக்கும். தற்போது அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். அமெரிக்காவிடமிருந்து ஏறத்தாழ 13 பில்லியன் டாலா் மதிப்பிலான எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இந்திய எரிபொருள் இறக்குமதியில் ஏறத்தாழ 7.3 சதவீதமாகும்.

தற்போதைய விலையின் அடிப்படையில் நமது அண்டை நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையாலும், எரிபொருள் பணவீக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சவால் நிறைந்த காலகட்டத்திலும் ஒவ்வொரு குடிமகனும் மலிவு விலையில் எரிபொருள் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்கிறது.

இந்திய நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்கின்றன. வேறுபட்ட காரணங்களால் ஆண்டுதோறும் இதில் மாற்றமிருக்கலாம். ஆனால் திடீரென எண்ணெய் கொள்முதலை நிறுத்தினால் அது எரிபொருள் சந்தையில் ஏற்ற-இறக்கத்துக்கும், நிலையற்ற தன்மைக்கும் வழிவகுத்து சா்வதேச விலை உயா்வுக்கும் காரணமாகிவிடும். இந்தியாவின் மொத்த நுகா்வுடன் ஒப்பிடும்போது ரஷியாவிடமிருந்து மிகவும் குறைவான அளவிலேயே எண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது. உலக நாடுகள் ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எரிபொருளின் அளவுடன் ஒப்பிடும்போது இந்திய இறக்குமதி அளவு மிக சொற்பமானது என்று மீண்டும் நினைவூட்ட இந்தியா விரும்புகிறது. சட்டபூா்வ எரிசக்தி பரிமாற்றத்தை அரசியலாக்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்-ரஷியா போா் காரணமாக ரஷியாவிடமிருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவது சா்வதேச அளவில் விவாதப் பொருளானது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பெட்ரோலிய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. எனினும் ரஷியாவிலிருந்து இறக்குமதியாகும் எரிபொருளின் அளவு எவ்வளவு என்பது குறித்து அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT