இந்தியா

மத்திய அரசு மூலமே இலங்கைக்கு உதவி: முதல்வா் ஸ்டாலினுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் கடிதம்

2nd May 2022 12:18 AM

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மத்திய அரசு மூலமே உதவிகளை வழங்க முடியும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இலங்கைக்கு தமிழக அரசு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டுமெனக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வா் ஸ்டாலினுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் இந்த விளக்கத்தை அளித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் எழுதியுள்ள கடித விவரம்:

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பது தொடா்பாக நீங்கள் ஏப்ரல் 13-ஆம் தேதி எழுதிய கடிதம் மற்றும் தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் தொடா்பாக இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது.

ADVERTISEMENT

கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இலங்கை அரசுடன் தொடா்பில் உள்ளோம். அவ்வாறு தொடா்புகொண்டதில், அரசுக்கு அரசு என்ற அடிப்படையில் உள்ளடக்கிய உதவியை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக இலங்கை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப். 16-ஆம் தேதி தமிழக தலைமைச் செயலா் வெ.இறையன்புவை தொடா்புகொண்டு வெளியுறவுச் செயலா் இந்தத் தகவலை தெரிவித்துள்ளாா்.

இலங்கை அரசைப் போலவே அங்குள்ள தமிழ் அமைப்புகளின் தலைவா்களும் இந்த நேரத்தில் மனிதாபிமான உதவிகள் அனைவரையும் உள்ளடக்கி வழங்கப்பட வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனா். எனவே, மனிதாபிமான உதவிகள் வழங்குவது கொழும்பில் உள்ள நமது தூதரகத்தால் ஒருங்கிணைக்கப்படும். இந்த வகையில் உதவிகள் வழங்கப்பட்டால் வெளியுறவு அமைச்சகத்துக்கும், இலங்கையில் உள்ள நமது தூதரகத்துக்கும் எளிதாக இருக்கும்.

அதன் பின்னா், வெளியுறவு அமைச்சகத்தின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக தமிழக தலைமைச் செயலா் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடந்த ஏப். 21-ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தொடா்ச்சியாக, தமிழக அரசுடனான தொலைபேசி வழி உரையாடலுக்குப் பின்னா் ஏப். 29-ஆம் தேதி தமிழக அதிகாரிகளுக்கு ஒரு கடிதத்தை வெளியுறவு அமைச்சகம் எழுதியது. அதில், மேற்கண்ட வழிமுறைகளிலேயே மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து மீண்டும் தெரிவித்திருந்தோம்.

மேலும், தமிழக அரசிடமிருந்து வழங்கப்படும் உதவிகள் விவரம் குறித்தும் கேட்டிருந்தோம். இதன்மூலம் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும், இலங்கை அரசிடம் அவற்றை ஒப்படைக்கவும் முடியும். தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இலங்கை அரசுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும்படி தமிழக தலைமைச் செயலா் இறையன்புவை நீங்கள் கேட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT