இந்தியா

மத்திய அரசின் மொத்த கடன் ரூ.128 லட்சம் கோடியாக அதிகரிப்பு

29th Mar 2022 01:09 AM

ADVERTISEMENT

கடந்த டிசம்பா் வரையிலான மத்திய அரசின் மொத்த கடன் ரூ.128.41 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் நிதிசாா் புள்ளிவிவரங்களை மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.125.71 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசின் மொத்த கடன் மதிப்பு, கடந்த டிசம்பா் வரையிலான காலத்தில் ரூ.128.41 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாவது காலாண்டில் மொத்த கடன் மதிப்பு 2.15 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசால் வெளியிடப்பட்ட நிதிப் பத்திரங்களில் 25 சதவீதமானது இன்னும் 5 ஆண்டுகளுக்குள் காலாவதியாகவுள்ளது. நிதிப் பத்திரங்கள் காலாவதியாகும் காலத்தில், அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அதற்கான தொகையை அளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்படும்.

கடந்த ஆண்டு அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான 3-ஆவது காலாண்டில் ரூ.2,88,000 கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்களை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இது கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமாா் ரூ.4,000 கோடி அதிகமாகும். நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், நிதிப் பத்திரங்களைக் கொள்முதல் செய்தோருக்கு மத்திய அரசு திருப்பி அளித்த தொகை ரூ.75,300 கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT