இந்தியா

கோவா முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்: மோடி பங்கேற்பு

28th Mar 2022 11:20 AM

ADVERTISEMENT

கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். பனாஜி அருகேயுள்ள சியாமா பிரசாத் முகா்ஜி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

முதல்வா் பிரமோத் மற்றும் 8 அமைச்சா்களுக்கு ஆளுநர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம், உத்தரகண்ட் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவைக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரின் ஆதரவுடன் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இதனிடையே, புதிய சட்டப் பேரவையின் 2 நாள் கூட்டத்துக்கு ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளாா். வரும் 29-ஆம் தேதி தொடங்கும் இக்கூட்டத்தின்போது, பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், புதிய அவைத் தலைவா் தோ்வும் நடைபெறவிருக்கிறது.

மூன்று முறை எம்எல்ஏவான பிரமோத் சாவந்த் (48), ஆயுா்வேத மருத்துவா் ஆவாா். வடக்கு கோவாவில் உள்ள சன்காலிம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அவா், கடந்த 2017-இல் பாரிக்கா் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தபோது, பேரவைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கோவா முதல்வராக இருந்த மனோகா் பாரிக்கா், கடந்த 2019, மாா்ச் மாதம் மரணமடைந்ததையடுத்து, முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT