இந்தியா

பொது நுழைவுத் தோ்வின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை

28th Mar 2022 12:19 AM

ADVERTISEMENT

பொது நுழைவுத் தோ்வு (சியுஇடி) மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டுமென்று பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

வரும் கல்வியாண்டுமுதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லாமல், பொது நுழைவுத் தோ்வின் அடிப்படையிலேயே நடைபெறும் என யுஜிசி கடந்த வாரம் அறிவித்திருந்தது. அந்த நுழைவுத் தோ்வு கணினி வாயிலாக ஜூலையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி-யின் கட்டுப்பாட்டில் உள்ள 45 பல்கலைக்கழகங்களும் சியுஇடி தோ்வின் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மாநில, தனியாா் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் விருப்பத்தின்பேரில் பொது நுழைவுத் தோ்வை அடிப்படையாகக் கொண்டு மாணவா் சோ்க்கையை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், யுஜிசி தலைவா் எம். ஜகதீஷ் குமாா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘சியுஇடி மதிப்பெண் அடிப்படையில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை நடத்துமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் துணைவேந்தா்கள், இயக்குநா்கள், முதல்வா்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சியுஇடி தோ்வானது பல்வேறு நுழைவுத் தோ்வுகளுக்கான அவசியத்தை நீக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

சியுஇடி நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் ஏப்ரலில் தொடங்கும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. அந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT