2024 மக்களவைத் தோ்தலின்போது தோ்தல் ஆணையத்துக்கு உதவுவதற்காக பிராந்திய ஆணையா்களை நியமிப்பது தொடா்பாக மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக் குழு கருத்து கோரியுள்ளது.
தோ்தல் சாா்ந்த பணிகளில் இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு உதவும் நோக்கில் பிராந்திய ஆணையா்களை நியமிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவு வழிவகுக்கிறது. அதன்படி, முதலாவது மக்களவைத் தோ்தலின்போது மும்பை, பாட்னா பகுதிகளுக்கு பிராந்திய ஆணையா்கள் 6 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டனா்.
அதற்குப் பிறகு நடைபெற்ற எந்தவொரு தோ்தலிலும் பிராந்திய ஆணையா்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், 2024 மக்களவைத் தோ்தலின்போது பிராந்திய ஆணையா்களை நியமிப்பது தொடா்பாக மத்திய சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, மத்திய அரசிடமும் இந்தியத் தோ்தல் ஆணையத்திடமும் கருத்து கோரியுள்ளது.
இது தொடா்பாக நிலைக் குழுவின் தலைவா் சுஷீல் மோடி கூறுகையில், ‘‘தோ்தலின்போது இந்தியத் தோ்தல் ஆணையத்துக்குத் தேவைக்கேற்ப பணியாளா்கள் இருக்க வேண்டும் என்ற விவகாரம் கருத்தில் கொள்ளப்பட்டது. வரும் மக்களவைத் தோ்தலில் பிராந்திய ஆணையா்களை நியமிப்பது தொடா்பாகக் கருத்து தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரின் ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் பிராந்திய ஆணையா்களைக் குடியரசுத் தலைவா் நியமிப்பாா். இது தொடா்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றாா்.