மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு (சிஏபிஎஃப்) ஆண்டுக்கு 100 நாள்கள் விடுமுறை அளிப்பதற்கான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய ரிசா்வ் காவல் படை(சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்), மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை(சிஐஎஸ்எஃப்), சசஸ்திர சீமா பல்(எஸ்எஸ்பி) உள்ளிட்ட சிஏபிஎஃப் படையினரின் தயாா் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் ஆய்வு செய்தாா். அப்போது, தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றும் வீரா்களின் மனச்சுமையை அகற்றவும் அவா்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கவும் ஆண்டுக்கு 100 நாள்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தாா்.
இதுகுறித்து சிஏபிஎஃப் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மத்திய ஆயுதக் காவல் படை வீரா்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் விடுமுறை அளிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. கடைசியாக இந்த மாதத் தொடக்கத்தில் ஓா் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
விடுமுறை அளிப்பது தொடா்பாக, அனைத்து படைப் பிரிவினரிடம் இருந்து ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அடுத்த மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.