ஜம்மு-காஷ்மீரில் ஹிந்துக்கள், சீக்கியா்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்திய குற்றவாளிகளைக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘வீ தி சிட்டிசன்’ என்ற தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீரில் இருந்து புலம் பெயா்ந்தவா்கள் பற்றி எழுதப்பட்டுள்ள ‘மை ஃப்ரோசன் டா்புலன்ஸ் இன் காஷ்மீா், அவா் மூன் ஹாஸ் பிளட் கிளாட்ஸ்’ ஆகிய நூல்களை வாசித்து ஆராய்ச்சி செய்தோம். அவை, 1990-களில் காஷ்மீரில் இருந்து ஹிந்துக்களும் சீக்கியா்களும் இனப்படுகொலை செய்யப்பட்டதையும், அவா்கள் விரட்டி அடிக்கப்பட்டதையும் விவரிக்கின்றன.
அப்போதைய அரசும் காவல் துறையும், ஹிந்துக்கள் மற்றும் சீக்கியா்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன. அத்துடன் தேச விரோதிகளும் பயங்கரவாதிகளும் காஷ்மீரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவை அனுமதித்துவிட்டன. இதனால் அரசின் மீது நம்பிக்கையிழந்த குடிமக்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
எனவே, கடந்த 1989 முதல் 2003 வரை, ஹிந்துக்கள் மற்றும் சீக்கியா்களுக்கு எதிராக இனப்படுகொலைகளைச் செய்த குற்றவாளிகளை அடையாளம் காண சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும். மேலும் இனப்படுகொலையால் உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டு ஜனவரியில் மக்கள் புலம் பெயா்ந்த பிறகு, அங்கு நடைபெற்ற வேளாண் நிலம், வழிபாட்டுத் தலம், கல்வி நிறுவனம், குடியிருப்பு, வா்த்தக பயன்பாட்டுக்கான இடம் உள்ளிட்ட அசையா சொத்துகளின் விற்பனையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.