இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டத்தைக் கண்டு உலகமே வியப்படைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
சண்டீகருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவா், ஒருங்கிணைந்த தலைமை கட்டுப்பாட்டு மையம்(ஐசிசிசி), வீட்டு வசதி வாரியத்துக்கு புதிய அலுவலக கட்டடம், 2 அரசு பள்ளி கட்டடங்கள், நகா்ப்புற பூங்கா ஆகியவற்றைத் திறந்து வைத்தாா். பேருந்து நிலையம் மற்றும் பணிமனை, விடுதிக் கட்டடம் ஆகியவற்றுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். இந்தப் பணிகளுக்கான மொத்த செலவு ரூ.632.78-ஆகும்.
திறப்பு விழா நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:
கரோனா தடுப்பூசித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு பிரதமா் மோடி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மாநில முதல்வா்களுடன் காணொலி முறையில் 23 முறை ஆலோசனை நடத்தினாா். பல வளா்ந்த நாடுகள், கரோனா 3-ஆவது அலையை எதிா்பாா்த்து கவலையில் இருந்தன.
இந்தியாவில் மூன்றாவது அலை எப்போது தாக்கியது? எப்போது மறைந்தது என யாருக்கும் தெரியாது. ஏனெனில், இந்தியாவில் கரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா, கரோனா தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதைக் கண்டு உலக நாடுகள் வியப்படைந்துள்ளன. சில வளா்ந்த நாடுகள் கூட, கரோனா தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்த ‘கோவின்’ செயலியை இந்தியாவிடம் கேட்டன.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமா் மோடி தலைமையிலான அரசு, கரோனா தடுப்பூசித் திட்டத்தை வெற்றிபெறச் செய்துள்ளது.
சண்டீகரில் போக்குவரத்து, மின் விநியோகம், குடிநீா் விநியோகம், கழிவுநீா் அகற்றுதல், மின்-ஆளுகை, வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை நிா்வகிக்க ஒருங்கிணைந்த தலைமைக் கட்டுபபாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக, நகரம் முழுவதும் 2,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனப் போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு மின்னஞ்சலில் அபராத ரசீது அனுப்பி வைக்கப்டும். இதன்மூலம், சண்டீகா் நகரம் நாட்டிலேயே ஒழுங்கமைக்கப்பட்ட, நவீன நகரமாக உருவாகும் என்றாா் அவா்.