தரையில் இருந்து வானை நோக்கி ஏவப்படும் இரு நடுத்தர ரக ‘எம்ஆா்எஸ்ஏஎம்’ ஏவுகணைகள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டன.
எம்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணையானது தரையில் இருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இரு எம்ஆா்சாம் ஏவுகணைகள் ஒடிஸாவின் பாலேசுவரம் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஏவி பரிசோதிக்கப்பட்டன.
முதல் ஏவுகணையானது தொலைதூரத்தில் இருந்த இலக்கைத் தாக்கி அழித்ததாகவும், இரண்டாவது ஏவுகணையானது குறைந்த தொலைவில் இருந்த இலக்கைத் தாக்கி அழித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இரு ஏவுகணைகளும் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாகவும், பரிசோதனை வெற்றிகரமாக இருந்ததாகவும் டிஆா்டிஓ தெரிவித்தது. வானில் மிக வேகமாகப் பறந்த இலக்கை எம்ஆா்சாம் ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி அழித்ததாகவும் டிஆா்டிஓ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணையானது டிஆா்டிஓ, இஸ்ரேல் வான்வெளி தொழிலகம் (ஐஏஐ) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டது. அந்த ஏவுகணையில் ரேடாா் உள்ளிட்ட நவீன கருவிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகை ஏவுகணைகளானது இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எம்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணைகளின் வெற்றிகரமான பரிசோதனைக்காக டிஆா்டிஓவுக்கும் இந்திய ராணுவத்துக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா். டிஆா்டிஓ அதிகாரிகளுக்கு அதன் தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க தரையில் இருந்து ஏவப்படும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணையின் பரிசோதனை, அந்தமான்-நிகோபா் தீவுகளில் கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது ஒரே வாரத்துக்குள் மீண்டுமொரு ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் பதற்ற சூழல் நீடித்து வரும் நிலையில், இந்தியா ஏவுகணைகளைத் தொடா்ந்து பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.