இந்தியா

தென்னகத்தில் தேசிய தரவு மையம் அமைக்க ஆய்வு

25th Mar 2022 04:57 AM | நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT


புது தில்லி: பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஆலோசனைகளின் அடிப்படையில் தேசிய தரவு மைய அமைப்பதற்கான கொள்கை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை விரிவாக்கும் வகையில், உள்ளூர் தரவு மையங்கள் ஏற்படுத்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? குறிப்பாக பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ள தென் மாநிலங்களில் இதை அமைக்க மத்திய அரசு ஏதேனும் ஆலோசனை நடத்தியிருக்கிறதா? என மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்துள்ள பதில்: 

தரவு மையங்கள் (டேட்டா சென்டர்கள்) என்பவை ஒட்டுமொத்த 'டிஜிட்டல் இந்தியா' உள் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். தற்போது பொது கிளவுட், கிளவுட் எனப்படும் உலகளாவிய நெட்வொர்க் சர்வர்கள் அடிப்படையிலான சேவைகள் அதிகரித்துள்ளன. இதனால் தரவு மையங்களுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. இதன் அடிப்படையில், தேசிய தரவு மையக் கொள்கை ஆய்வில் உள்ளது. உலகளாவிய நெட்வொர்க் மற்றும் டேட்டா சென்டர்களுக்கான முதன்மையான இடமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். பசுமை தரவு மையம் மற்றும் கிளவுட் சேவைகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான உள்கட்டமைப்புக்கான தீர்வுகளை ஊக்கப்படுத்தும் வகையில் தேசிய தரவு மையக் கொள்கை இருக்கும்.

ADVERTISEMENT

தேசிய தரவு மைய கொள்கைக்காக கடந்த பிப்ரவரி 25} ஆம் தேதி சென்னையில் பொது ஆலோசனை மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 65}க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் மற்றும் மத்திய } மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் 295}க்கும் மேற்பட்டோர் காணொலி வழியாகவும் கலந்து கொண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். இதில் பெறப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில் தேசிய தரவு மைய கொள்கை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.

காலை உணவு திட்டம் இல்லை: தூத்துக்குடி திமுக உறுப்பினர் கனிமொழி காலை உணவு குறித்த மற்றோரு கேள்வியையும் எழுப்பினார். "தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 12 கோடி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்கு மத்திய அரசு கடந்தாண்டு ஆய்வு செய்து இதற்கு ரூ. 4, 000 கோடி தேவைப்படும் என மதிப்பிட்டது. இதன்படி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளதா ? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

2013}ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி 1 முதல் எட்டாவது வகுப்பு வரையிலான அனைத்து உள்ளாட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஊட்டச்சத்துடன் சமைக்கப்பட்ட மதிய உணவு பெறத் தகுதியானவர்கள். இதன்படி அரசு விடுமுறை நாள்கள் தவிர மற்ற வேலை நாள்களில் இந்த உணவு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

பிரதம மந்திரி போஷன் திட்டத்தின்படி தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு 12 கிராம் புரதச் சத்து உள்ளடக்கிய 450 கலோரிகள் உணவும், தொடக்கப்பள்ளிகளுக்கு அடுத்த நிலை குழந்தைகளுக்கு 20 கிராம் புரதம் உள்ளிட்ட 700 கலோரி உணவும் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்த திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அதே நேரம் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பால், முட்டை, பழங்கள் போன்ற கூடுதல் ஊட்டச்சத்து பொருள்களை தங்களது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT