இந்தியா

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை யூடியூப்பில் வெளியிடுங்கள்: கேஜரிவால்

25th Mar 2022 12:10 PM

ADVERTISEMENT

 

வரிவிலக்கு தேவையென்றால் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை யூடியூபில் வெளியிடுங்கள் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'  திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990-ல் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திரைப்படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விமர்சனங்களும், ஆதரவும் எழுந்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை தில்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு தில்லியில் வரிவிலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். 

இதற்கடுத்து பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ‘வரிவிலக்கு அளிக்க வேண்டுமென்றால் விவேக் அக்னிஹோத்ரியிடம் பேசி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை யூடியூப்பில் வெளியிடச் சொல்லுங்கள். அனைவரும் இலவசமாக பார்ப்பார்கள். ஒரு படத்திற்காக பாஜகவினர் நாடு முழுவதும் போஸ்டர் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்’ எனத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பிகார் , இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்  ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT