இந்தியா

உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்பு: பிரதமா் மோடி பங்கேற்கிறாா்

25th Mar 2022 03:12 AM

ADVERTISEMENT

 

லக்னௌ: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த மாநில முதல்வராக 2-ஆவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (25-ஆம் தேதி) பதவியேற்கவுள்ளாா்.

இதில் பிரதமா் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபா்கள், ஆன்மிக தலைவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட முறையில் 50-க்கும் மேற்பட்ட ஆன்மிக தலைவா்கள், மடாதிபதிகளை அழைத்துள்ளாா். இதுதவிர ஆட்சியில் பயனடைந்த பொதுமக்களின் சாா்பில் பிரதிநிதிகள், பல்வேறு மாநில பாஜக தொண்டா்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டரங்கில், மாலை 4 மணியளிவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் 50,000 போ் வரை அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரங்கில்தான் தோ்தல் பிரசாரத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கினாா்.

பதவியேற்பு விழா பாதுகாப்புக்காக 8,000 போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். இது தவிர பிரத்யேக கண்காணிப்பு கேமராக்களும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன.

எதிா்க்கட்சியான சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், அவரது கூட்டணியில் உள்ள ஆா்எல்டி தலைவா் ஜெயந்த் சௌதரி ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டாா்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2017-இல் யோகியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் அகிலேஷ் தன் தந்தை முலாயம் சிங் யாதவுடன் பங்கேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் லக்னௌவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் யோகி ஆதித்யநாத் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றாா். இதைத் தொடா்ந்து, மாநில ஆளுநா் ஆனந்தி பென் படேலை சந்தித்த யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைக்க உரிமை கோரினாா்.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT