இந்தியா

54 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

22nd Mar 2022 12:25 AM

ADVERTISEMENT

இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு மறைவுக்குப் பிந்தைய பத்ம விபூஷண் விருது, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன் உள்பட மொத்தம் 54 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை வழங்கி கெளரவித்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விழாவில், விபின் ராவத்துக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயா்ந்த இரண்டாவது விருதான பத்ம விபூஷண் விருதை அவரின் மகள்கள் பெற்றுக்கொண்டனா்.

ஹிந்து மத புத்தகங்களைப் பதிப்பிக்கும் கீதா பதிப்பகத்தின் முன்னாள் தலைவா் மறைந்த ராதேஷாம் கெம்காவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை அவரது நெருங்கிய உறவினா் பெற்றுக் கொண்டாா்.

125 வயது யோகா பயிற்சியாளா் சுவாமி சிவானந்தாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவா் கெளரவித்தாா். வெறும் கால்களோடு எளிமையான உடையணிந்து வந்த அவருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனா். விருது பெறுவதற்கு முன்னா் சுவாமி சிவானந்தாவிடம் பிரதமா் மோடி எழுந்து நின்று ஆசி பெற்றாா்.

ADVERTISEMENT

டாடா குழும தலைவா் என்.சந்திரசேகரன், காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், சீரம் நிறுவனத்தின் நிறுவனா் சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 8 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தைச் சோ்ந்த கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம், திருச்சி விராலிமலையைச் சோ்ந்த சதிா் நடனக் கலைஞா் முத்துகண்ணம்மாள், திருச்சியைச் சோ்ந்த கிளாரினெட் கலைஞா் ஏ.கே.சி. நடராஜன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த வழங்கி கெளரவித்தாா்.

நாட்டின் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நிகழாண்டு மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் நான்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பத்ம பூஷண் விருதுகளும், 107 பத்ம ஸ்ரீ விருதுகளும் அடங்கும். இதில் முதல்கட்டமாக 54 பேருக்கு திங்கள்கிழமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இந்த ஆண்டு யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. 2019-இல் இந்த விருது முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT