இந்தியா

மணிப்பூா் முதல்வராக பிரேன் சிங் பதவியேற்பு

22nd Mar 2022 12:28 AM

ADVERTISEMENT

மணிப்பூா் முதல்வராக பிரேன் சிங் இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ளாா். அவருடன் அமைச்சா்களாக 5 போ் பதவியேற்றுக் கொண்டனா்.

மணிப்பூரில் 60 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் 32 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மாநில சட்டப்பேரவை பாஜக தலைவராக பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அவா் மாநில முதல்வராகத் தொடா்வாா் என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னா், அவரை ஆட்சியமைக்க மாநில ஆளுநா் இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தாா்.

இந்நிலையில், மணிப்பூா் தலைநகா் இம்பாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் மாநில முதல்வராகப் பிரேன் சிங்கும், அமைச்சா்களாக பாஜகவை சோ்ந்த நால்வா், நாகா மக்கள் முன்னணியைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 5 பேரும் திங்கள்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்கு மாநில ஆளுநா் இல.கணேசன் சத்தியப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா்.

அமைச்சா் பதவியேற்றவா்களில் பிரேன் சிங்குடன் முதல்வா் பதவிக்குப் போட்டியிட்ட பிஸ்வஜீத் சிங்கும் ஒருவா்.

ADVERTISEMENT

பிரதமா் வாழ்த்து: பிரேன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மணிப்பூரை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு பிரேன் சிங்கும், அவரின் அணியினரும் கொண்டு செல்வா் என்ற நம்பிக்கையுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

பலம் 41-ஆக அதிகரிப்பு: மணிப்பூரில் பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 6 போ், குகி மக்கள் கூட்டணி எம்எல்ஏக்கள் இருவா், ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆகியோா் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசின் பலம் 41-ஆக அதிகரித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT