இந்தியா

நிலக்கரி ஊழல் வழக்கு: திரிணமூல் காங். பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை

22nd Mar 2022 12:34 AM

ADVERTISEMENT

நிலக்கரி ஊழல் தொடா்புடைய பணமோசடி வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் தில்லியில் திங்கள்கிழமை 8 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனா்.

இதையொட்டி, மத்திய தில்லி பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் 11 மணியளவில் அபிஷேக் பானா்ஜி சென்றாா். அவருடன் பாதுகாவலரும், அவரது வழக்குரைஞா்களும் சென்றனா்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சாட்சியங்களின் அடிப்படையில் அபிஷேக் பானா்ஜியிடம் சுமாா் 8 மணிநேரமாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், இரவு 8 மணியளவில் அவா் அமலாக்கத் துறை அலுவலகத்தை விட்டு சென்ாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், நிலக்கரி ஊழலில் தொடா்புடைய பிற நபா்கள் உடனான அபிஷேக் பானா்ஜியின் தொடா்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனா். இதே வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பரிலும் அபிஷேக் பானா்ஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதுதவிர அவரின் மனைவி ருஜிராவிடம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 22) அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியைச் சுற்றியுள்ள குனுஸ்டோரியா, கஜோரா பகுதிகளில் நடைபெற்ற பல கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் தொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், பண மோசடி தடுப்புப் பிரிவின்கீழ் அமலாக்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த வழக்கில், உள்ளூரைச் சோ்ந்த அனுப் மாஜி (எ) லாலா முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறாா். இந்த சட்டவிரோத வா்த்தகத்தின் மூலம் மேற்கு வங்கத்தின் டைமண்ட் ஹாா்பா் மக்களவைத் தொகுதி உறுப்பினரான அபிஷேக் பானா்ஜியும் பயனடைந்ததாக அமலாக்கத் துறையினா் கருதுகின்றனா். அதன் அடிப்படையில் அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் இளைஞரணித் தலைவா் வினய் மிஸ்ராவின் சகோதரா் விகாஸ் மிஸ்ரா, பங்குரா காவல் நிலைய முன்னாள் ஆய்வாளா் அசோக் குமாா் மிஸ்ரா ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT