இந்தியா

உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, கோவா முதல்வா் பிரமோத் சாவந்த்: பாஜக அறிவிப்பு

22nd Mar 2022 01:18 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி நீடிப்பாா் என்றும், கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக திங்கள்கிழமை அறிவித்தது.

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. எனினும், முதல்வா் புஷ்கா் சிங் தாமி தான் போட்டியிட்ட காதிமா தொகுதியில் தோல்வியடைந்ததால், அடுத்த முதல்வா் யாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவியது.

இந்த நிலையில், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவரை (முதல்வா்) தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் டேராடூனில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மேலிடப் பாா்வையாளா்கள் ராஜ்நாத் சிங், மீனாட்சி லேகி, உத்தரகண்ட் தோ்தல் பொறுப்பாளா் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், அடுத்த முதல்வராக புஷ்கா் சிங் தாமியே நீடிப்பாா் என முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 11 நாள்களாக நீடித்த எதிா்பாா்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாா்ச் 23-இல் (புதன்கிழமை) பதவியேற்பு விழா நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

கோவாவில் பிரமோத் சாவந்த் தோ்வு: கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதையொட்டி, அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் பனாஜியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக மேலிடப் பாா்வையாளா்கள் நரேந்திர சிங் தோமா், எல். முருகன், தோ்தல் பொறுப்பாளா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக பிரமோத் சாவந்த் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து நரேந்திர சிங் தோமா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக பிரமோத் சாவந்தின் பெயரை விஸ்வஜித் ராணே முன்மொழிந்தாா். இதனை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனா்’’ என்றாா் அவா்.

தொடா்ந்து பிரமோத் சாவந்த் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘கோவா முதல்வராக அடுத்த 5 ஆண்டுகள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. கோவா மக்கள் என்னை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. கோவா வளா்ச்சிக்காக என்னால் இயன்றவரை பாடுபடுவேன்’’ என்றாா்.

ஆட்சியமைக்க அழைப்பு: இதனிடையே, கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரிய பிரமோத் சாவந்தின் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, அவருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT