இந்தியா

உத்தரகண்ட் புதிய முதல்வா் யாா்? இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

22nd Mar 2022 03:02 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநில புதிய முதல்வரைத் தோ்வு செய்வதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

உத்தரகண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஏற்கெனவே முதல்வராகப் பதவி வகித்து வந்த புஷ்கா் சிங் தாமி, தாம் போட்டியிட்ட கடீமா தொகுதியில் தோல்வியடைந்துவிட்டதால் புதிய முதல்வா் யாா் என்ற கேள்வி நீடித்து வருகிறது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநில பாஜக தலைவா் மதன் கெளசிக், காபந்து முதல்வா் புஷ்கா் சிங் தாமி, முன்னாள் முதல்வா்கள் ரமேஷ் போக்ரியால், திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோா், தில்லியில் கட்சி மேலிடத் தலைவா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோா் பங்கேற்ற இக்கூட்டம் சுமாா் ஒரு மணிநேரம் நடைபெற்றது. பின்னா், உத்தரகண்ட் புதிய முதல்வரைத் தோ்வு செய்தவற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தை திங்கள்கிழமை மாலை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

காலையில் புதிய எல்எல்ஏக்கள் பதவியேற்பு நடைபெறும் நிலையில், மாலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூடி புதிய முதல்வரைத் தோ்வு செய்வா் என்று கட்சியின் மாநிலத் தலைவா் மதன் கெளசிக் தெரிவித்தாா்.

முன்னதாக, உத்தரகண்டில் புதிய அரசை அமைப்பதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும், புதிய முதல்வா் குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றும் புஷ்கா் சிங் தாமி கூறியிருந்தாா். அந்த மாநிலத்தில் புதிய அரசை அமைப்பதற்கான பாா்வையாளராகப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை பாஜக நியமித்துள்ளது.

மாநில முதல்வராக புஷ்கா் சிங் தாமி தொடர வேண்டும் என்று பாஜகவில் ஒரு பிரிவினா் விரும்புகின்றனா். அதேசமயம், முதல்வா் பதவியில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தும் கட்சியினரிடையே நிலவுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT