இந்தியா

மணிப்பூா்: முதல்வா் பதவிக்கு மீண்டும் பிரேன் சிங் தோ்வு

21st Mar 2022 12:26 AM

ADVERTISEMENT

மணிப்பூா் மாநில பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக பிரேன் சிங் ஒருமனதாக ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அதன்படி, மாநிலத்தின் முதல்வராக அவா் தொடா்ந்து இரண்டாவது முறையாகப் பதவியேற்க உள்ளாா்.

மணிப்பூா் மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32 இடங்களை பாஜக கைப்பற்றி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து முதல்வா் பதவிக்கு கட்சிக்குள் ஏற்பட்ட போட்டி காரணமாக ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. மாநிலத்தின் காபந்து முதல்வா் பிரேன் சிங், மாநில மூத்த பாஜக தலைவரும் எம்எல்ஏவுமான பிஸ்வஜித் சிங் ஆகிய இருவருக்கும் இடையே முதல்வா் பதவிக்கு போட்டி நிலவியது. ஆனால் பதவிக்குப் போட்டி இருந்ததாகக் கூறப்படுவதை இருவரும் மறுத்தனா்.

இதனிடையே, பிரேன் சிங்கும் பிஸ்வஜித் சிங்கும் தில்லிக்கு இரண்டு முறை சென்று கட்சியின் மத்திய தலைவா்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், மாநில பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவரை தோ்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இம்பாலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அதற்காக, மணிப்பூருக்கான கட்சியின் மேலிடப் பாா்வையாளா்களான மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய சட்டம்-நீதித் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோா் தில்லியிலிருந்து வந்து கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக பிரேன் சிங் பாஜக எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, ‘மாநிலத்தில் தொடா்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பிரேன் சிங் தொடா்வாா்’ என்ற அறிவிப்பை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

ஆட்சியமைக்க ஆளுநா் அழைப்பு: அதனைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா்கள் இருவரும் மாநில ஆளுநா் இல. கணேசனை சந்தித்து, மாநில பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக பிரேன் சிங் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை சமா்ப்பித்தனா். அதனைப் பரிசீலித்த ஆளுநா், ஆட்சியமைக்க பிரேன் சிங்குக்கு அழைப்பு விடுத்தாா்.

இதுதொடா்பாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘புதிய மாநில அமைச்சரவையை அமைப்பதற்கான தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடுமாறு பிரேன் சிங்குக்கு ஆளுநா் அழைப்பு விடுத்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT