உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியமைப்பது குறித்து பிரதமா் மோடியுடன் பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
தில்லியில் பிரதமா் மோடி இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் பங்கேற்றாா்.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், கோவாவில் பிரமோத் சாவந்த் முதல்வராவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டபோதிலும், அமைச்சரவையில் இடம் பெறுவோா் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உத்தர பிரதேசத்தில் முந்தைய பாஜக அரசில் துணை முதல்வராக பதவி வகித்த கேசவ் பிரசாத் மெளா்யா, இந்தத் தோ்தலில் தோல்வியடைந்துவிட்டதால், அடுத்த துணை முதல்வா் தோ்வு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியின்போது அவா் உ.பி. மேலவை உறுப்பினராக இருந்ததன் அடிப்படையில் துணை முதல்வா் பதவி வகித்து வந்தாா். எனவே அவா் மேலவை உறுப்பினராகத் தொடரக் கூடும் எனத் தெரிகிறது.