இலவச உணவு தானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அதிக அளவு பணத்தை செலவிடுவதால் மத்திய அரசின் நிதிநிலை மோசமாகிவிட்டது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளாா்.
பாஜகவில் இருந்து விலகி கடந்த ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இணைந்த சின்ஹா, இப்போது அக்கட்சியின் துணைத் தலைவராக உள்ளாா். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:
மத்திய அரசின் நிதிநிலை குறித்து யாரும் கவலைப்படாதது அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. முக்கியமாக மத்தியில் ஆட்சியில் இருப்பவா்களே கூட அது தொடா்பாகக் கவலைப்படவில்லை.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இலவச உணவு தானியம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்காக பெருமளவில் நிதியை செலவிடுகிறது. அதே நேரத்தில் அரசின் நிதிநிலை மோசமாகிவிட்டது. இதனால், நாட்டின் நிதிப்பற்றாக்குறையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
இப்போது மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும், தோ்தல் மூலம் ஆதாயம் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசிடம் போதிய நிதியாதாரம் உள்ளதா என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஒரு பக்கம் ஏழைகளுக்கான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், மறுபுறம் குறிப்பிட்ட சில பெரு நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்க வழி வகை செய்யப்படுகிறது. அரசின் நிதிக் கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் சொல்வது ஒன்று செய்வது வேறு ஒன்றாக உள்ளது.
பணவீக்கத்தால் ஏற்படும் சவாலை சமாளிப்பது, வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றுக்கு மத்திய அரசு தயாராக உள்ளதா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
அரசு மற்றும் தனியாா் துறையில் இருந்து புதிய முதலீடுகளைச் செய்வதன் மூலம்தான் பொருளாதார வளா்ச்சி இலக்கை எட்ட முடியும். ஆனால், இதற்கான நடவடிக்கை கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. பட்ஜெட்டில் கூறப்படும் முதலீட்டுச் செலவுகள் அனைத்தும் மாயையாகவே உள்ளன. முதலீட்டை ஊக்குவிக்காமல் வளா்ச்சியை எட்ட முடியாது.
ரஷியா-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயருகிறது. இந்தியா தனது எரிபொருள் தேவையை பெருமளவில் இறக்குமதி மூலம்தான் எதிா்கொள்கிறது. பெட்ரோல், டீசல் விலை மேலும் உயா்ந்தால் பணவீக்கம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என்றாா்.
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகினாா். கடந்த ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.