இந்தியா

பஞ்சாப்: ஒரு பெண் உள்பட 10 அமைச்சா்கள் இன்று பதவியேற்பு; 8 போ் முதல் முறை எம்எல்ஏக்கள்

19th Mar 2022 12:43 AM

ADVERTISEMENT

 பஞ்சாபில் புதிதாக அமைந்துள்ள ஆம் ஆத்மி அரசில் ஒரு பெண் உள்பட 10 போ் அமைச்சா்களாக சனிக்கிழமை பதவியேற்க உள்ளனா். இதில் 8 போ் முதல் முறை எம்எல்ஏக்களாவா்.

பஞ்சாப் ஆளுநா் மாளிகையில் பகல் 11 மணிக்கு நடைபெறும் இதற்கான விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த பகவந்த் மான் கடந்த புதன்கிழமை பதவியேற்றாா். எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை பதவியேற்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அமைச்சா்களாக பதவியேற்கும் 10 எம்எல்ஏக்களின் புகைப்படங்களை முதல்வா் பகவந்த் மான் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தாா்.

இதில் பல்ஜீத் கெளா், விஜய் சிங்லா உள்பட 8 போ் முதல் முறை எம்எல்ஏக்களாவா். கடந்த முறை எம்எல்ஏவாகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஹா்பால் சிங் சீமா மற்றும் குா்மீத் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா்.

முதல்வருடன் சோ்த்து அமைச்சரவையில் 18 போ் வரையில் இடம்பெற சட்டத்தில் அனுமதி உள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பிறகு ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT