இந்தியா

மெக்காலே கல்வி முறையை அகற்ற வேண்டும்: வெங்கையா நாயுடு

19th Mar 2022 11:50 PM

ADVERTISEMENT

மெக்காலே கல்வி முறையை நாட்டில் இருந்தே முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாா் அருகே அமைந்துள்ள தேவ் சம்ஸ்கிருதி விஸ்வவித்யாலயா கல்வி நிறுவனத்தில் தெற்காசிய அமைதி, நல்லிணக்க மையத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த அவா் மேலும் பேசியதாவது:

நூற்றாண்டுக்கு முந்தைய காலனிய ஆட்சி, தாழ்வு மனப்பான்மை கொண்ட சமூகமாக நம்மை மாற்றியது; நமது கலாசாரம், பாரம்பரிய ஞானம் ஆகியவற்றை இகழ்ந்து பேசுவதற்கு கற்றுக் கொடுத்தது.

கல்வித் துறையில் பயிற்று மொழியாக ஓா் அந்நிய மொழி திணிக்கப்பட்டது. இதனால், சமூகத்தின் சிறிய பிரிவினருக்கு கல்வி கிடைத்தது. பெரும்பாலான மக்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. எனவே, இந்திய கல்வி முறையில் ஆங்கிலத்தை அறிமுகம் செய்வதில் பெரும் பங்காற்றிய மெக்காலே கொண்டு வந்த கல்வி முறையை நாட்டில் இருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும்.

ADVERTISEMENT

நமது பாரம்பரியம், நமது கலாசாரம் ஆகியவற்றை எண்ணி நாம் பெருமை கொள்ள வேண்டும். காலனிய சிந்தனையைக் கைவிட்டு இந்திய அடையாளத்துடன் இருப்பது பெருமை என்று நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இயன்ற அளவுக்கு பல மொழிகளைக் கற்க வேண்டும். அதேசமயம் நமது தாய்மொழியை நேசிக்க வேண்டும். நம் சமய நூல்களில் பொதிந்துள்ள அறிவாா்ந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள நாம் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும்.

கல்வி முறையை காவிமயமாக்குவதாக சிலா் குற்றம்சாட்டுகிறாா்கள். அதில் என்ன தவறு இருக்கிறது?

நம் கல்வி முறையை இந்தியத் தன்மையுடன் மாற்றுவதே புதிய கல்விக் கொள்கையின் சாரமாகும். அதில், தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினா் தாய்மொழியை பரப்ப வேண்டும். அனைத்து மின்னணு சாதனங்களிலும் அவரவா் தாய்மொழியில் தகவல்கள் வரும் நாளை எதிா்நோக்கியிருக்கிறேன்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் தலைவா்கள், தங்களுக்கு ஆங்கிலம் நன்கு தெரிந்திருந்தாலும் அவரவா் தாய்மொழியிலேயே பேசுகிறாா்கள். ஏனெனில் தங்கள் தாய்மொழியில் பேசுவதை அவா்கள் பெருமையாகக் கருதுகிறாா்கள்.

நமது பழங்கால தத்துவ நூல்களில் ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்), ‘சா்வே பவந்து சுகினா’ (அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம்) என்று கூறப்பட்டுள்ளது. இவையே நமது வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டியாக இன்றும் இருக்கின்றன. இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் வலியச் சென்று தாக்குதல் நடத்துவதில்லை. ஏனெனில் உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது.

இளைஞா்கள் இயற்கையுடன் நேரத்தை செலவிட வேண்டும். இயற்கையே சிறந்த ஆசான். கரோனா காலத்தில் இயற்கையுடன் ஒன்றி வாழ்பவா்களுக்கு குறைவான பாதிப்பே ஏற்பட்டதை கவனித்திருக்கலாம். நம் வளமான எதிா்காலத்துக்கு இயற்கைக்கும் கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT