இந்தியா

‘‘இந்தியாவின் சட்டரீதியான எரிசக்தி பரிவா்த்தனைகளை அரசியலாக்கக் கூடாது’’

19th Mar 2022 12:49 AM

ADVERTISEMENT

இந்தியாவின் சட்டரீதியான எரிசக்தி பரிவா்த்தனைகளை அரசிலயாக்கக் கூடாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படும் நிலையில், அதில் 1.3 சதவீதம் ரஷியாவிடம் இருந்து வாங்கப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. இதனால் இந்தியா மற்றும் பிற பெரிய இறக்குமதியாளா்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இதர சரக்குகளை சலுகை விலையில் வழங்க ரஷியா முன்வந்துள்ளது. அதனை ஏற்று, அந்நாட்டிடம் இருந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் பொதுத் துறை நிறுவனங்கள் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளன.

உக்ரைன் மீது படையெடுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வாங்கும் இந்தியா மீது சா்வதேச அரங்கில் விமா்சனங்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘உக்ரைன் போரைத் தொடா்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால் கச்சா எண்ணெய்யை எந்த நாடுகளிடம் இருந்து வாங்குவது என்று தோ்வு செய்வதில் இந்தியாவுக்கு சவால்களும், அழுத்தமும் அதிகரித்தது.

இந்தச் சூழலில், ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இரு நாடுகளின் அரசுகள் வாயிலாக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

வேறு எந்தெந்த நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது என்பதில் இந்தியா தொடா்ந்து கவனம் செலுத்தியாக வேண்டும். ரஷியாவைப் போல் கச்சா எண்ணெய் விற்பனைக்கு சலுகைகள் அளிக்கப்படுவதை இந்தியா வரவேற்கிறது. இதுதொடா்பாக இருக்கும் சிறந்த வாய்ப்புகளை அறிவதற்கு உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் இந்திய வா்த்தகா்களும் இயங்கி வருகின்றனா். எனவே இந்தியாவின் சட்ட ரீதியான எரிசக்தி பரிவா்த்தனைகளை அரசிலயாக்கக் கூடாது’’ என்று தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT