இந்தியா

2 ஆண்டுகளுக்குப் பிறகுகளை கட்டிய ஹோலி பண்டிகை

19th Mar 2022 12:24 AM

ADVERTISEMENT

வட மாநிலங்களில் வசந்த உற்சவமான ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக ஹோலி பண்டிகையின்போது கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும், தலைநகா் தில்லியிலும் மக்கள் வீதிகளில் திரண்டு வண்ணப்பொடிகளை பூசியும், நடனமாடியும் உற்சாகமாக ஹோலியைக் கொண்டாடினா்.

தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத், சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோா் பொதுமக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடினா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தனது சொந்த ஊரான கோரக்பூரில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினாா். அங்கு வன விலங்குகள் பூங்காவை பாா்வையிட்டது உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவா் பங்கேற்றாா். சண்டீகரில் பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா, முதல்வா் மனோகா் லால் கட்டா் ஆகியோருடன் இணைந்து பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஹோலி கொண்டாடினாா்.

ADVERTISEMENT

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநில முதல்வா்கள், எதிா்க்கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

உ.பி.யில் மோதல்- இருவா் பலி:

உத்தர பிரதேசத்தின் அமேதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஹோலி பண்டிகையின்போது இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவா் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா். இதையடுத்து அங்கு அதிகஅளவில் காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT