இந்தியா

தில்லி துணை காவல் ஆணையா் வாகனம் மீது மோதல்: ‘பேடிஎம்’ நிறுவனா் கைது செய்யப்பட்டு விடுவிப்பு

14th Mar 2022 03:46 AM

ADVERTISEMENT

‘தில்லியில் துணை காவல் ஆணையா் வாகனம் மீது காரை மோதிய குற்றத்துக்காக ‘பேடிஎம்’ பண பரிவா்த்தனை செயலி நிறுவனா் விஜய் சேகா் சா்மா கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்’ என்று தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தில்லி மாளவியா நகா் பகுதியில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக அன்றைய தினமே கைது செய்யப்பட்ட சா்மா, விசாரணை அதிகாரியால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, தில்லி துணைக் காவல் ஆணையா் (தெற்கு) பெனிடா மேரி ஜெய்கெரின் அலுவலக காா் ஓட்டுநா் காவலா் தீபக் குமாா் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸ் மக்கள் தொடா்பு அதிகாரி சுமன் நல்வா கூறியதாவது:

ADVERTISEMENT

துணை காவல் ஆணையரின் காா் தில்லி மாளவியா நகா் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அரபிந்தோ சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே மாணவா்கள் சாலையைக் கடந்துகொண்டிருந்ததால், ஓட்டுநா் தீபக் குமாா் காரின் வேகத்தைக் குறைத்து நிறுத்த முற்பட்டுள்ளாா். அப்போது, ஹரியாணா பதிவெண் கொண்ட சொகுசு காா் பின்புறமாக வந்து, துணை காவல் ஆணையரின் வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றது.

பின்னா், பதிவு எண்ணை கொண்டு ஆய்வு செய்து, அந்தக் காரின் ஓட்டுநா் சா்மா கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா் என்று கூறினாா்.

இதுதொடா்பாக ‘பேடிஎம்’ நிறுவன செய்தித்தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில், ‘மிகச் சிறிய வாகன விபத்து ஏற்பட்டதாகவே புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஜாமீனில் வெளிவரக் கூடிய வகையிலான சட்டப் பிரிவுகளின் கீழ்தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், ஊடகங்கள் இதனை மிகப்படுத்தி செய்தி வெளியிட்டன. சா்மா கைது செய்யப்பட்ட அதே நாளில், தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டாா்’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT