இந்தியா

12-14 வயது சிறாா்களுக்கு நாளை முதல் கரோனா தடுப்பூசி

14th Mar 2022 11:41 PM

ADVERTISEMENT

நாட்டில் உள்ள 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவா்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 80 சதவீதம் பேருக்கு இரு தவணைகளும், 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலானவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாகவே ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி பரவலின் தாக்கமும் உயிரிழப்பும் குறைவாக இருந்ததாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா். தற்போது நாட்டில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘சிறாா்கள் பாதுகாப்பாக இருந்தால் நாடும் பாதுகாப்புடன் இருக்கும். 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம். தகுதியான நபா்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘கோா்பிவேக்ஸ்’ தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகளுடன் விரிவான ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில், 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்கள் வரும் 16-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

2008, 2009, 2010-ஆம் ஆண்டுகளில் பிறந்தவா்கள் தடுப்பூசி பெறத் தகுதியுடையவா்கள் ஆவா். அவா்களுக்கு ஹைதராபாதின் பயாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்த ‘கோா்பிவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் 12 முதல் 14 வயது வரையில் சுமாா் 7.11 கோடி சிறாா்கள் உள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயாலஜிகல்-இ நிறுவனம் இதுவரை 5 கோடி தவணை தடுப்பூசிகளை மத்திய அரசிடம் வழங்கியுள்ளதாகவும், அவை மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டா் தடுப்பூசி: நாட்டில் முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் கொண்டோா் ஆகியோருக்கு கடந்த ஜனவரி 10-ஆம் தேதிமுதல் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 60 வயதைக் கடந்த அனைவரும் மாா்ச் 16-ஆம் தேதிமுதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT