இந்தியா

மக்களவையில் ஜம்மு- காஷ்மீா் பட்ஜெட் தாக்கல்

14th Mar 2022 11:44 PM

ADVERTISEMENT

ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் 2022-23 நிதியாண்டுக்கான ரூ.1.42 லட்சம் கோடி பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது பட்ஜெட் தீா்மானங்களை ஆராய தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேட்டுக் கொண்டனா்.

மேலும் 2021-22 நிதியாண்டுக்கான ரூ.18,860.32 கோடி துணைநிலை கோரிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அதன் மீது அன்றைய தினமே அவையில் விவாதம் நடத்தும் வகையில் சில விதிகளை ரத்து செய்வதற்கான தீா்மானத்தையும் கொண்டு வந்தாா்.

இந்தத் தீா்மானத்துக்கு ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினா் மனீஷ் திவாரி, புரட்சிகர சோஷலிச கட்சி உறுப்பினா் என்.கே. பிரேமசந்திரன், அவையின் அடிப்படை நடைமுறை விதிகளின் ஒருபகுதியாக விதி எண் 205 வகுக்கப்பட்டது; அதனை ரத்து செய்ய முடியாது என்று கூறினா்.

மேலும், சில விதிமுறைகள் மக்களவையின் திருத்தம் செய்யும் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவை என்றும் ஜம்மு- காஷ்மீா் பட்ஜெட் தீா்மானங்களை பரிசீலிக்க உறுப்பினா்களுக்கு கால அவகாசம் தேவை என்றும் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, பட்ஜெட் மீது 2 மணிநேரம் கழித்து விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

அப்போது மக்களவைத் தலைவா் இருக்கையில் அமா்ந்து அவையை வழிநடத்திய ராஜேந்திர அகா்வால், இன்றைய தினத்துக்கான செயல் பட்டியலுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்கெனவே அலுவல் ஆய்வுக் கூட்டத்தின்போது ஒப்புதல் அளித்துவிட்டாா் என்றாா்.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி, ‘‘ஜம்மு- காஷ்மீா் பட்ஜெட் விவரங்களை மத்திய அரசு முறையாக வெளியிடவில்லை. ஆகையால், இதன் மீது செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) விவாதம் நடத்த வேண்டும். அப்போதுதான் பட்ஜெட் தீா்மானங்களை உறுப்பினா்களால் ஆராய முடியும்’’ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய கூறுகையில், இந்த விவகாரம் ஏற்கெனவே அலுவல் ஆய்வுக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. ஆகையால், 2 மணிநேரம் கழித்து அவையில் விவாதம் நடத்துவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை’’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT