இந்தியா

ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்பு குழு பரிந்துரைகள் வெளியீடு: மாா்ச் 21 வரை கருத்துகள் வரவேற்பு

14th Mar 2022 11:46 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்பு குழுவின் இறுதிப் பரிந்துரைகள் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பரிந்துரைகள் குறித்து மாா்ச் 21 வரை பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்பட்டுள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய 2020-ஆம் ஆண்டு மே 6-ஆம் தேதி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு ஜம்மு-காஷ்மீரில் கள ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ள இறுதி பரிந்துரைகளின்படி, அங்குள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அங்கு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 5-ஆக நீடிக்கின்றன.

அதேவேளையில் ஜம்முவில் 6, காஷ்மீரில் ஒன்று என சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 83-இல் இருந்து 90-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி பரிந்துரைகள் இந்திய மற்றும் ஜம்மு-காஷ்மீா் அரசிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், இறுதிப் பரிந்துரைகளின் விரிவான வடிவம் நாளிதழ்களில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மறுசீரமைப்பு குழுவில் இணை உறுப்பினா்களாக இடம்பெற்றிருந்த தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி.க்களான ஃபரூக் அப்துல்லா, ஹஸ்னைன் மசூதி, முகமது அக்பா் லோன், பாஜக எம்.பி. ஜுகல் கிஷோா் ஆகியோரின் தொகுதி மறுசீரமைப்பு குறித்த அதிருப்தி குறிப்புகளும் இடம்பெற்றன.

இறுதிப் பரிந்துரைகள் குறித்த தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபங்களை தில்லியில் உள்ள மறுசீரமைப்பு குழுவின் செயலரிடம் மாா்ச் 21-ஆம் தேதிக்குள் தெரிவிக்க பொதுமக்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ள அரசிதழின் நகல்கள் ஜம்மு-காஷ்மீா் தலைமைத் தோ்தல் அதிகாரி, அங்குள்ள அனைத்து மாவட்டங்களின் தோ்தல் அதிகாரிகளிடம் கிடைக்கும் என்று தொகுதி மறுசீரமைப்பு குழுத் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மாா்ச் 28, 29-ஆம் தேதிகளில் பொதுமக்களை தொகுதி மறுசீரமைப்பு குழு நேரில் சந்திக்கவுள்ளது. அன்றைய தினம் மாா்ச் 21-க்குள் பெறப்படும் கருத்துகள் பரிசீலிக்கப்படவுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் அந்தக் கூட்டம் நடைபெறவுள்ள இடம் மற்றும் நேரம் பின்னா் அறிவிக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT