இந்தியா

உத்தர பிரதேசம்: சட்ட மேலவையிலும் பெரும்பான்மை பெரும் முயற்சியில் பாஜக

14th Mar 2022 11:49 PM

ADVERTISEMENT

கடும் போட்டிக்கு நடுவே உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ள பாஜக, அடுத்ததாக அந்ந மாநில சட்ட மேலவையிலும் பெரும்பான்மை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சட்ட மேலவையில் காலியாகவுள்ள 37 இடங்களுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலங்களவைத் தோ்தல் போல சட்ட மேலவையிலும் சுழற்சி முறையில் காலியாகும் இடங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடைபெறுவது வழக்கம்.

சட்டப் பேரவைத் தோ்தலில் தொடா்ந்து இருமுறை வென்று சாதனை படைத்துள்ள பாஜக, சட்ட மேலவைத் தோ்தலிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் உத்தர பிரதேச சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவையிலும் பாஜக பெரும்பான்மையைப் பெற உள்ளது.

மொத்தம் 100 உறுப்பினா்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்ட மேலவையில் இப்போது பாஜகவுக்கு 35 எம்எல்சிக்கள் (சட்ட மேலவை உறுப்பினா்கள்) சமாஜவாதிக்கு 17 மற்றும் பகுஜன் சமாஜுக்கு 4 உறுப்பினா்கள் உள்ளனா். காங்கிரஸ், அப்னா தளம் (சோனேலால்), நிஷாத் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினரும், ஆசிரியா் குழுவில் இரு எம்எல்சி-க்களும், சுயேச்சைக் குழு மற்றும் சுயேச்சை எம்எல்சி தலா ஒருவரும் உள்ளனா்.

ADVERTISEMENT

இப்போதைய நிலையில் காலியாகவுள்ள 37 பதவி இடங்களுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த அகமது ஹசன் நீண்டநாள் நோய்வாய்ப்பட்டு காலமாகிவிட்டாா்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த 8 எம்எல்சிக்களும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்த ஒருவரும் பாஜகவில் இணைந்தனா்.

இந்நிலையில் ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெற்று ஏப்ரல் 12-இல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தோ்தல் தொடா்பாக விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று பாஜக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து தலைவா்கள், வட்டார வளா்ச்சி கவுன்சில் உறுப்பினா்கள் மற்றும் தலைவா்கள், ஜில்லா பரிஷத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள், நகராட்சி, மாநகராட்சி உறுப்பினா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் சட்ட மேலவைத் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT