இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

10th Mar 2022 04:11 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தரப்பில் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசின் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி விசாரணையை ஒத்தி வைக்கக் கோரினார்.
 இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜராகி, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கவும் அவரை முன்கூட்டியே விடுவிக்கவும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
 தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி ஆஜராகி,"மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் கோபால் கோட்சேவின் ஆயுள்கால தண்டனை குறைக்கப்பட்ட பிறகு, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சிறையில் 32 ஆண்டுகளை கழித்துள்ளார்' என்றார்.
 ஜாமீன் வழங்கி உத்தரவு: நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் பேரறிவாளன் பரோலில் மூன்று முறை விடுவிக்கப்பட்டிருந்த போது, அவரது நடத்தை குறித்து எந்த புகாரும் இல்லை. சிறைவாச காலத்தில் கல்வித் தகுதிகளையும், திறமைகளையும் அவர் பெற்றிருப்பதைக் காட்டும் வகையில், போதிய ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், மனுதாரர் சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் கழித்திருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இந்த ஜாமீனானது, விசாரணை நீதிமன்ற நிபந்தனைகளுக்குள்பட்டது. மனுதாரர் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் உள்ளூர் காவல் நிலையத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். இந்த விவகாரம் ஏப்ரல் இறுதியில் மீண்டும் விசாரிக்கப்படும்.

Tags : supreme court
ADVERTISEMENT
ADVERTISEMENT