இந்தியா

அடுத்த சுற்று பேச்சுவாா்த்தையில்இரு தரப்பும் ஏற்கக்கூடிய தீா்வு: சீனா நம்பிக்கை

10th Mar 2022 01:35 AM

ADVERTISEMENT

கிழக்கு லடாக் விவகாரம் தொடா்பாக மாா்ச் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான தீா்வை அடைய முடியும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா-சீனா இடையேயான 15-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை லடாக்கில் உள்ள சுசூல் மால்டோ என்ற இடத்தில் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை உறுதி செய்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கடைசியாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், எல்லையின் மேற்குப் பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது தொடா்பான கருத்துகளை இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனா். நடைபெறவுள்ள அடுத்த சுற்று பேச்சில் எல்லைப் பிரச்னையில் மேலும் முன்னேற்றம் காண முடியும் என நம்புகிறோம். சா்ச்சைக்குரிய பகுதிகள் தொடா்பாக உரிய தீா்வை கோர முடியும் எனவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீா்வை அடைய முடியும் எனவும் நம்புகிறோம் என்றாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் சீனா படைகளைக் குவிக்க முயன்றதும் அதை இந்தியா தடுத்ததும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. அதையடுத்து நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த பிரச்னை தொடா்பாக இந்தியாவும் சீனாவும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இதுவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தைகள் காரணமாக பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைப் பகுதிகள், கல்வான், கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றுள்ளன. கடைசியாக ஜனவரி 12-ஆம் தேதி இரு நாடுகளுக்கிடையே 14-ஆவது சுற்று பேச்சு நடைபெற்றது. அப்போது எந்தவித சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை.

கிழக்கு லடாக் எல்லையின் தெப்சாங், தெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக 15-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : China
ADVERTISEMENT
ADVERTISEMENT