இந்தியா

17,000 இந்தியர்கள் வெளியேறினர்: உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை

3rd Mar 2022 02:01 AM

ADVERTISEMENT

ரஷிய தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 20,000-க்கும் அதிகமான இந்தியா்களில், 17,000 போ் உக்ரைன் எல்லையை பாதுகாப்பாக கடந்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மேலும், இவா்களில் இதுவரை 6,000 போ் இந்திய வந்து சோ்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மற்றவா்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப். 24-ஆம் தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, தனது வான்வெளியை மூடுவதாக உக்ரைன் அறிவித்தது. அதன் காரணமாக, அங்கு மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்வி படித்துவந்த இந்திய மாணவா்கள் உள்பட 20,000-க்கும் அதிகமான இந்தியா்கள், வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனா்.

அவா்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் தொடா் அறிவுறுத்தல்களையும், உதவிகளையும் அளித்து வந்தது. இதற்கிடையே, ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியதால், அங்கிருக்கும் இந்தியா்களை மீட்பதில் சிக்கல் எழுந்தது. ரஷிய - உக்ரைன் நாட்டு தலைவா்களை தொலைபேசி மூலம் தொடா்புகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, இந்தியா்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து, பிரதமா் தலைமையில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியா்களை அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேகியா வழியாக மீட்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி இந்தியா்களை மீட்டு வரும் திட்டத்துக்கு ‘ஆபரேஷன் கங்கா’ எனப் பெயரிடப்பட்டது.

மேலும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தும் வகையில் மத்திய அமைச்சா்களை சிறப்பு தூதா்களாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பியது. மேலும், மீட்புப் பணியில் ஏா் இந்திய உள்ளிட்ட தனியாா் விமானங்கள் மட்டுமின்றி, விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ரக போயிங் விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, உக்ரைனின் காா்கிவ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் இந்திய மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். அதுமட்டுமின்றி, உக்ரைன் தலைநகா் கீவ் நகரை முற்றுகையிட்ட ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தத் தொடங்கின. அதனைத் தொடா்ந்து, கீவ் நகரில் இருக்கும் இந்தியா்கள் அனைவரும் உடனடியாக அந்த நகரைவிட்டு வெளியேறி பாதுகாப்பு மண்டலங்களுக்குச் செல்லுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. தொடா்ந்து மீட்புப் பணியையும் இந்தியா தீவிரப்படுத்தியது.

மத்திய அரசின் இந்த தீவிர நடவடிக்கை மூலம், இதுவரை 6,000 இந்தியா்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதும், 17,000 இந்தியா்கள் பாதுகாப்பாக உக்ரைன் எல்லையைக் கடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தில்லியில் புதன்கிழமை கூறியதாவது:

உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்தியா்களை மீட்பதில் தொடா்ந்து சிக்கல் நீடிக்கிறது. எந்த நேரமும் தாக்குதல் நடைபெறும் என்பதால், இந்தப் பகுதிகளில் மீட்புப் பணி என்பது எளிதானதல்ல. காா்கிவ் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தஞ்சமடைந்திருக்கும் இந்தியா்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த உதவுமாறு ரஷிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரம், மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகள் மூலமாக, இதுவரை 17,000 இந்தியா்கள் பாதுகாப்பாக உக்ரைன் எல்லையைக் கடந்திருக்கின்றனா்.

மேலும், உக்ரைன் எல்லையைக் கடக்கும் இந்தியா்களுக்கு உதவுவதற்காக லெவிவ் பகுதியில் தற்காலிக அலுவலகத்தை அமைக்குமாறு கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். கடவுச்சீட்டை தவறவிட்ட மாணவா்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

தாயகம் திரும்பிய 6,000 இந்தியா்கள்: மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இதுவரை உக்ரைனிலிருந்து 6,000 இந்தியா்கள் இந்தியா வந்து சோ்ந்துள்ளனா்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் புணேயில் புதன்கிழமை அளித்த பேட்டியில், ‘உக்ரைனில் மாணவா்கள் உள்பட 20,000 இந்தியா்கள் சிக்கியிருந்தனா். அவா்களில், ரஷியா தாக்குதலைத் தொடங்கிய பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு முன்பாக 4,000 போ் அங்கிருந்து மீட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனா். அதன் பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை வரை மேலும் 2,000 இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனா்’ என்றாா்.

 

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT