இந்தியா

வீட்டு உரிமையாளரின் கண்ணில் ஜண்டுபாம், ஹார்பிக் விட்டு குருடாக்கிய பெண்

3rd Mar 2022 01:30 PM

ADVERTISEMENT


ஹைதராபாத்: வீட்டு வேலை செய்து வந்த 32 வயது பெண், திருடுவதற்கு வசதியாக, வீட்டின் உரிமையாளரின் கண்ணில், ஜண்டுபாம், ஹார்பிக் போன்றவற்றை சொட்டு மருந்தாக விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்பிக், ஜண்டு பாம் போன்றவற்றை கண்களில் விட்டால், கண்பார்வை பறிபோகும், வசதியாக நாம் வீட்டில் திருடலாம் என்று திட்டமிட்டு, தான் வேலை செய்து வந்த வீட்டின் மூதாட்டியின் கண்பார்வைக்கு கேடுவிளைவித்த பார்கவி, கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க.. சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்த சென்னை பங்களா: அதுவும் எப்போது, யாருக்குத் தெரியுமா?

73 வயதாகும் ஹேமாவதி, நச்சாராம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது ஒரே மகன் லண்டனில் இருக்கிறார். அவர் தனது தாயை உடன் இருந்து கவனித்துக் கொள்ள பார்கவியை வேலைக்கு அமர்த்தியுள்ளார். பார்கவி தனது 7 வயது மகளுடன் ஹேமாவதி குடியிருக்கும் வீட்டுக்கே வந்து அங்கேயே தங்கி வேலைகளை செய்து வந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம், கண்ணில் லேசாக வலிப்பதாக ஹேமாவதி கூறியிருக்கிறார். உடனே அதை சரி செய்யும் சொட்டு மருந்து இருப்பதாகக் கூறி, ஹார்பிக், ஜண்டு பாம் தைலம் போன்றவற்றை தண்ணீரில் கலந்து கண்களில் சொட்டு மருந்தாக விட்டுள்ளார். 4 நாள்களில், ஹேமாவதியின் கண்கள் சிவந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்த, உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு ஹேமாவதியின் மகன் கூறியுள்ளார். அங்குச் சென்றும் பயனில்லை. 

இதற்குள், ஹேமாவதியின் வீட்டிலிருந்து 40 ஆயிரம் ரொக்கம், இரண்டு தங்க வளையல், தங்க செயின் உள்ளிட்ட சில நகைகளை பார்கவி திருடி வைத்துக் கொண்டார்.

ஹேமாவதியின் கண் பார்வை மெல்ல குறையத் தொடங்கி, முற்றிலும் கண்பார்வையை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. உடனடியாக அவரது மகன் லண்டனிலிருந்து வந்து, தாயை அழைத்துக் கொண்டு கண் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கண்களில் ஏதோ ஒவ்வாத ரசாயனங்கள் விடப்பட்டிருப்பதை கண்டறிந்து தெரிவித்தனர். இதையடுத்தே குடும்பத்தினருக்கு பார்கவி மீது சந்தேகம் வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை செய்ததில், பார்கவி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT