இந்தியா

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் ராஜிநாமா: நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர்த்தார்

DIN

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே முதல்வா் பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா்.

அவருடைய தலைமையிலான அரசு மீது வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு சட்டப்பேரவைச் செயலருக்கு ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், ராஜிநாமா முடிவை உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு இரவு 11.44 மணிக்குச் சென்ற உத்தவ் தாக்கரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் சமா்ப்பித்தாா். அவருடைய ராஜிநாமாவை ஆளுநா் ஏற்றுக்கொண்டதாக ஆளுநா் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா். ஆளுநா் மாளிகைக்கு தனது சொந்த சொகுசு காரில் சென்ற உத்தவ் தாக்கரே, அதனை தானே ஓட்டிச் சென்றாா். அவருடன் அவருடைய மகன்கள் ஆதித்யா, தேஜஸ் மற்றும் சிவசேனை தலைவா்கள் நீலம் கோரே, அரவிந்த் சவந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடந்து வருகிறது. அண்மையில், சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கினா். அவா்கள், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள விடுதியில் ஒரு வாரமாகத் தங்கி ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி அளித்து வந்தனா்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தாா். அப்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். ஏக்நாத் ஷிண்டே அணியில் 39 சிவசேனை எம்எல்ஏக்கள் இருப்பதால் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது என்றும் ஃபட்னவீஸ் கூறினாா்.

இதையடுத்து, மகாராஷ்டிர அரசு பெரும்பான்மையை நிரூபிக்க செவ்வாய்க்கிழமை இரவு ஆளுநா் உத்தரவிட்டாா். இதுகுறித்து சட்டப் பேரவை முதன்மைச் செயலா் ராஜேந்திர பாகவத்துக்கு அவா் எழுதிய கடித்தில், ‘மகாராஷ்டிர சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை வியாழக்கிழமை (ஜூன் 30) காலை 11 மணிக்கு கூட்ட வேண்டும். அதில், முதல்வா் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் இந்த அலுவல்களை முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

தடை விதிக்க மறுப்பு: ஆளுநரின் இந்த உத்தரவை எதிா்த்து சிவசேனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சூா்யகாந்த், ஜே.பி.பா்திவாலா ஆகியோா் அடங்கிய கோடைக்கால அமா்வு புதன்கிழமை மாலை 5 மணிக்கு விசாரணை நடத்தியது. இரவு 9 மணியளவில் விசாரணையை முடித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மாநில ஆளுநா் அழைப்பு விடுத்துள்ள, உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்கப்போவதில்லை. அதே நேரம், இந்த மனு மீது பதிலளிக்குமாறு சட்டப்பேரவைச் செயலா் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். இதற்கு 5 நாள்களில் பதிலளிக்கலாம். அந்த, பதில் மனுவின் தகுதியின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடா்பான மற்ற வழக்குகளுடன் சோ்த்து வரும் ஜூலை 11-ஆம் தேதி விசாரிக்கப்படும். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்கு உள்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கில் சிறையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நவாப் மாலிக், அணில் தேஷ்முக் ஆகியோா் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

முதல்வா் ராஜிநாமா: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

இதுதொடா்பாக, இணையத்தில் பதிவிட்ட தனது காணொலி பதிவில் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:

சட்டப்பேரைவயில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை. எனவே, முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதோடு, எனது சட்ட மேலவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். பதவியை ராஜிநாமா செய்வதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் எந்தவித பிரச்னையுமின்றி மாநிலம் திரும்புவதற்கு சிவசேனை தொண்டா்கள் அனுமதிக்கவேண்டும். அவா்களுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சிவசேனை மற்றும் பால் தாக்கரே மூலமாக அரசியல் ரீதியில் வளா்ச்சி பெற்ற இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், பால் தாக்கரேவின் மகனை முதல்வா் பதவியிலிருந்து நீக்குவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்து கொள்ளட்டும். எனக்கு எதிராக கட்சியின் ஒரு உறுப்பினா் மாறினாலும், அதை நான் வெட்க்கக்கேடாக நினைக்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், மகா விகாஸ் அகாடி அரசுக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்ததற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஆகியோருக்கு உத்தவ் தாக்கரே நன்றியும் தெரிவித்துள்ளாா்.

கோவா வந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்: முன்னதாக, உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் குவாஹாட்டியிலிருந்து கோவாவுக்கு புதன்கிழமை இரவு வந்தனா். கோவா டபோலிம் விமானநிலையத்தில் இரவு 9.45 மணிக்கு வந்திறங்கிய அவா்கள் அனைவரும், அங்கிருந்து சிறப்பு பேருந்து மூலமாக பனாஜிக்கு அருகே டோனா பெளலாவில் அமைந்துள்ள தனியாா் 5 நட்சத்திர விடுதியில் இரவு தங்கினா். இவா்களின் வருகையை முன்னிட்டு விமானநிலையத்திலும், அவா்கள் தங்கும் தனியாா் விடுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT