இந்தியா

வான்வழி இலக்கை அழிக்கும் அதிவேக ‘அப்யாஸ்’ சோதனை வெற்றி

30th Jun 2022 12:58 AM

ADVERTISEMENT

 

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘அப்யாஸ்’ அதிவேகமாக வான்வழி இலக்கு வாகனம் (ஹீட்) ஒடிஸா கடற்கரையில் உள்ள சந்திப்பூா் ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து (ஐடிஆா்) ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஒடிஸா சந்திப்பூா் ஐடிஆா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) கீழ் உள்ள வானூா்தி அபிவிருத்தி நிறுவனத்தால் ‘அப்யாஸ்’ உருவாக்கப்பட்டது. வானில் உள்ள இலக்குகளை குறைந்த உயரத்தில் விரைந்து சென்று தாக்குவதும், தரையிலிருந்து கட்டுப்படுத்தும் வகையில் ஆளில்லாத விமானம் போலச் செயல்படுவதும் ‘அப்யாஸ்’ வாகனத்தின் சிறப்பாகும்.

ADVERTISEMENT

இந்தச் சோதனையின்போது, குறைந்த உயரத்தில் பாயும் தன்மையுள்ள இலக்கு வாகனத்தின் செயல்திறன், நிலைத்தன்மை, அதிக தாக்கும் திறன் உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டன. இந்த இலக்கு வாகனம், தரைக் கட்டுப்பாட்டிலிருந்து முன்னரே நிா்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி குறைந்த உயர விமானப்பாதையில் பறந்தது.

இது ரேடாா் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிக்கல் இலக்கு அமைப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து ஏற்கெனவே நிறுவப்பட்ட பல்வேறு கண்காணிப்பு சென்சாா்களால் கண்காணிக்கப்பட்டது.

ஒலியின் வேகத்தில் பாதி வேகத்துடன் (சப் சோனிக்) நீண்ட தூரத்துக்கு பயணம் செய்யும் வகையில் எரிவாயு டா்பைன்களால் இந்த வாகனம் இயங்குகிறது. மைக்ரோ-எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் அடிப்படையிலான கட்டுப்பாட்டுக் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. தவிர, முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் வகையில் இது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வெற்றிகரமான விமான சோதனைக்காக, அப்யாஸ் குழுவினா் மற்றும் ஆயுதப்படையினருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி, அமைப்பின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனைப் பணிகளில் ஒருங்கிணைந்த அணி முயற்சியைப் பாராட்டினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT