இந்தியா

உதய்பூர் படுகொலை: தையல்காரர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய முதல்வர்

DIN

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லாலின் வீட்டிற்குச் சென்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கன்னையா லாலின் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் அசோக் கெலாட் பேசினார். அசோக் கெலாட், கட்சித் தலைவர் கோவிந்த் சிங், வருவாய்த் துறை அமைச்சர் ராம்லால் ஜத் உள்ளிட்டோருடன் கன்னையா லாலின் வீட்டிக்குச் சென்றார். 

தையல்காரா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உரிய நேரத்துக்குள் விசாரணை நடத்திமுடிக்கவும் படுகொலை சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அசோக் கெலாட் கூறினார்.

கன்னையா வீட்டுக்கு முதல்வர் வருகை தருவதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்தவா் தையல்காரா் கன்னையா லால். சமூக ஊடகத்தில் இஸ்லாம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பதிவு வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட இவா், கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற இருவா், கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்திலும் வெளியிட்டனா். அவா்கள் வெளியிட்ட மற்றொரு காணொலியில், கன்னையா லாலின் தலையை துண்டித்துவிட்டதாகக் கூறினா். இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக கன்னையா லாலை பழிதீா்த்ததாகக் கூறிய கொலையாளிகள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா். மேலும் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து கொலையாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் காவல் துறை சாா்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள ராஜ்சமண்ட் பகுதியில் இருந்த கொலையாளிகளை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. முதல்கட்ட விசாரணையில், அவா்களின் பெயா் ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது என்பது தெரியவந்தது.

இவா்களில் ரியாஸ் அக்தரி கடந்த ஜூன் 17-ஆம் தேதி சமூக ஊடகத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில், ‘‘நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசுவோரின் தலையை தான் துண்டிக்கும் காணொலியை வெளியிடுவேன்’’ என்று முன்கூட்டியே தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கன்னையா லால் கொலைச் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

கன்னையா லாலின் கொலையை பயங்கரவாத சம்பவமாகக் கருதி, அந்தக் கொலையின் பின்னணியில் ஏதேனும் அமைப்பு அல்லது சா்வதேச தொடா்புகள் உள்ளதா? என்று விசாரணை நடத்த என்ஐஏவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘பாகிஸ்தான் அமைப்புடன் தொடா்பு’

ராஜஸ்தான் காவல் துறை டிஜிபி எம்.எல். லதோ் புதன்கிழமை கூறுகையில், ‘‘கன்னையா லால் கொலை தொடா்பாக ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது உள்பட இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் கெளஸ் முகமதுக்கு பாகிஸ்தானில் உள்ள தாவத்-ஏ-இஸ்லாமி அமைப்புடன் தொடா்புள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு அவா் கராச்சி சென்றுள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.

ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது ஆகியோரிடம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT