குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை, வியாழக்கிழமை, மாநிலங்களவைச் செயலக முதன்மைச் செயலரும் தேர்தல் அலுவலருமான பி.சி. மோடி தெரிவித்துள்ளார்.
ஜூலை 18-ல் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 115 மனுக்களில் தாக்கலின்போதே 28 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவர் தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படாதது ஏன்?
மீதியிருந்த 72 வேட்பாளர்களின் 87 மனுக்களில் 79 மனுக்கள் தேவையான நிபந்தனைகளை நிறைவு செய்யாததால் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனுக்களை திரும்பப் பெறக் கடைசி நாளான ஜூலை 2-க்குப் பிறகு அரசிதழில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
நாட்டின் அதி உயர் பதவிக்காகப் போட்டியிட, முர்மு, சின்ஹ தவிர, மும்பையைச் சேர்ந்த குடிசைவாசி, தமிழகத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மனுச் செய்வோரைத் தேர்வாளர்கள் குழுவிலிருந்து (மக்களவை, மாநிலங்களவை, மாநிலங்களின் பேரவை உறுப்பினர்கள்) 50 பேர் முன்மொழியவும் 50 பேர் வழிமொழியவும் வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.