இந்தியா

மகாராஷ்டிர முதல்வராக இன்று மாலை பதவியேற்கிறார் ஃபட்னவீஸ்?

30th Jun 2022 03:53 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆட்சி அமையவிருக்கிறது. பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் இன்று மாலையே மாநில முதல்வராக பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவேந்திர ஃபட்னவீஸ், மூன்றாவது முறையாக மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஏற்கவிருக்கிறார்.

தேவேந்திர ஃபட்னவீஸை கோவாவிலிருந்து மும்பை திரும்பிய ஏக்நாத் ஷிண்டே இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்பட தனக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

இதையும் படிக்க.. இனி எனக்கு ஏன் விளம்பரம்? எதிர்க்கட்சிகளுக்கு ஸ்டாலின் பதிலடி

ADVERTISEMENT

தனது தலைமையிலான சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் ஏக்நாத் ஷிண்டே கூறியிருக்கிறார்.

பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து, மகாராஷ்டிரத்தில் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி கடிதம் அளித்து, பதவியேற்க அழைப்பு விடுக்க உரிமை கோரவிருக்கிறார். இதை ஏற்று, ஆளுநரும் ஃபட்னவீஸை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்பட்சத்தில், இன்று மாலை 7 மணிக்கு முதல்வராக தேவேந்திரன ஃபட்னவீஸ் பதவியேற்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடந்து வருகிறது. அண்மையில், சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கினா். அவா்கள், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள விடுதியில் ஒரு வாரமாகத் தங்கி ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி அளித்து வந்தனா்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தாா். அப்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். ஏக்நாத் ஷிண்டே அணியில் 39 சிவசேனை எம்எல்ஏக்கள் இருப்பதால் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது என்றும் ஃபட்னவீஸ் கூறினாா்.

இதையடுத்து, மகாராஷ்டிர அரசு பெரும்பான்மையை நிரூபிக்க செவ்வாய்க்கிழமை இரவு ஆளுநா் உத்தரவிட்டாா்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மீது வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு சட்டப்பேரவைச் செயலருக்கு ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், ராஜிநாமா முடிவை உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு இரவு 11.44 மணிக்குச் சென்ற உத்தவ் தாக்கரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் சமா்ப்பித்தாா். அவருடைய ராஜிநாமாவை ஆளுநா் ஏற்றுக்கொண்டதாக ஆளுநா் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா். ஆளுநா் மாளிகைக்கு தனது சொந்த சொகுசு காரில் சென்ற உத்தவ் தாக்கரே, அதனை தானே ஓட்டிச் சென்றாா். அவருடன் அவருடைய மகன்கள் ஆதித்யா, தேஜஸ் மற்றும் சிவசேனை தலைவா்கள் நீலம் கோரே, அரவிந்த் சவந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT